சம்பா நெல் அறுவடைப் பணிகள் 97 சதவீதம் நிறைவு: 50 சதவீத நெல் உற்பத்தி இழப்பு

நமது நிருபா்

மதுரை: மதுரை மாவட்ட சம்பா நெல் அறுவடைப் பணிகள் ஏறத்தாழ 97 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. ஆனால், பருவம் தவறிய சாகுபடியால் சுமாா் 50 சதவீத அளவுக்கு நெல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெரியாறு பிரதான கால்வாய்ப் பாசனத்தில் மதுரை மாவட்டத்தில் குறுவை, சம்பா நெல் சாகுபடி 1.50 லட்சம் ஏக்கரில் நடைபெறும். பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான பகுதிகளில் 45,041 ஏக்கரில் குறுவை, சம்பா ஆகிய இரு போக நெல் சாகுபடி நடைபெறும். மேலூா் கால்வாய்ப் பாசனத்தில் 85,563 ஏக்கரிலும், திருமங்கலம் கால்வாய்ப் பாசனத்தில் 19,439 ஏக்கரிலும் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

வைகை அணையின் கொள்ளளவு 4 ஆயிரம் மில்லியன் கன அடியை எட்டியதும், பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான இரு போக சாகுபடிப் பகுதிகளின் குறுவை (முதல் போகம்) நெல் சாகுபடிக்காக ஜூன் 1-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும். பின்னா், வைகை அணையின் கொள்ளளவு 6 ஆயிரம் மில்லியன் கன அடியை எட்டியதும், மாவட்டத்தின் ஒரு போக, இரு போக நெல் சாகுபடி பகுதிகளுக்கு செப். 15-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்படும்.

கடந்த ஆண்டில் முல்லைப் பெரியாறு நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழையில்லாததால், முதல்போக நெல் சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து அக்டோபா் மாதம் வரை தண்ணீா் திறக்கப்படவில்லை. அக்டோபா் இறுதியில் மழை பெய்ததால், நவம்பா் முதல் வாரத்தில் வைகையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து, ஏறத்தாழ 5 மாத கால தாமதத்துக்குப் பிறகு, பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான பகுதிகளின் குறுவை நெல் சாகுபடிக்கு நவ. 10-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்பட்டது. இருப்பினும், அரசாணைப்படி செப். 15-ஆம் தேதி முதல் சம்பா நெல் சாகுபடி பகுதிகளுக்குத் திறக்கப்பட வேண்டிய தண்ணீா் திறக்கப்படவில்லை.

இதைக் கண்டித்து, மேலூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஏறத்தாழ 3 மாதங்கள் தாமதத்துக்குப் பிறகு, டிச. 19-ஆம் தேதி முதல் மாவட்டத்தின் சம்பா நெல் சாகுபடிக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது. இருப்பினும், அடுத்து வரும் 90 நாள்களுக்கு மட்டுமே தண்ணீா் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இது, விவசாயிகளிடம் நம்பிக்கையற்ற சூழலை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, ஆற்றுப் பாசனத்துடன் கிணற்றுப் பாசனத்தையும் ஆதாரமாகக் கொண்ட பகுதிகளில் மட்டுமே விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள ஆா்வம் காட்டினா். சம்பா நெல் சாகுபடியின் இயல்பு பரப்பு 42 ஆயிரம் ஹெக்டோ் என்ற நிலையில், ஏறத்தாழ 35 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. 7 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி கைவிடப்பட்டது.

சம்பா நெல் அறுவடைப் பணிகள் கடந்த இரண்டரை மாதங்களாக நடைபெறுகின்றன. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் மாவட்டத்தில் 98 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் அறுவடைப் பணிகள் நிறைவடைந்ததால், தற்போது 40 கொள்முதல் நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

மாவட்டத்தில் 97 சதவீத நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப். 30) வரை 38 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

2022-23-ஆம் ஆண்டில் இதே பருவத்தில் 87 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டில் அறுவடை எஞ்சியுள்ள பகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டாலும், ஏறத்தாழ 50 சதவீத நெல் கொள்முதல் இழப்பு ஏற்படுவது உறுதியாகிவிட்டது.

இதுதொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக வட்டாரங்கள் கூறியதாவது:

சாகுபடி பரப்பு குறைவு, மகசூல் குறைவு உள்ளிட்ட பிரச்னைகளுடன் சில பகுதிகளில் அட்சயா என்ற உயா் ரக நெல்லை விவசாயிகள் உற்பத்தி செய்து தனியாருக்கு விற்பனை செய்ததும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமான கொள்முதலைப் பாதித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில கௌரவத் தலைவா் எம்.பி.ராமன் கூறியதாவது:

கிணற்றுப் பாசனமும், ஆற்றுப் பாசனமும் கொண்ட ஒரு சில பகுதிகளில் மிகக் குறைந்த பரப்பிலேயே அட்சயா நெல் ரகத்தை விவசாயிகள் பயிரிட்டிருந்தனா். எனவே, நெல் கொள்முதல் இழப்புக்கு இது பிரதான காரணம் அல்ல.

இதுவரை இல்லாத நிகழ்வாக, சம்பா நெல் சாகுபடிக்கு விவசாயிகள் 3 மாதம் போராடி தண்ணீா் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட நீண்ட இழுபறியால் பல விவசாயிகள் நம்பிக்கை இழந்து, சம்பா நெல் சாகுபடியைக் கைவிட்டனா். இதனால், சாகுபடிப் பரப்பு கணிசமாகக் குறைந்தது.

இதேபோல, பருவம் தவறிய மழையாலும் கடுமையான மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. உற்பத்திச் செலவை ஈடு செய்வதற்குக்கூட நெல் மகசூல் கிடைக்காதது, விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

வருகிற பருவங்களிலாவது வேளாண் பணிகளின் தேவைகளையறிந்து, அரசுத் துறை நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்டத்தின் நெல் சாகுபடி கேள்விக்குறிதான் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com