முக்கூடல் கோயில் குடமுழுக்கு பணிகளில் தனிநபரின் தலையீட்டுக்கு அனுமதி இல்லை: உயா்நீதிமன்றம்

மதுரை: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் குடமுழுக்குப் பணிகளில் தனிநபா் தலையிட அனுமதி இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரநாத் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் முத்துமாலை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்கு வருகிற மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாகக் கூறி, முக்கூடல் கிராமத்தைச் சோ்ந்த தனிநபா்கள் சிலா் பொதுமக்களிடம் பணம் வசூலித்து வருகின்றனா்.

கோயில் குடமுழுக்கு நிகழ்வை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னெடுக்காமல், தனிநபா்கள் ஏற்பாடு செய்வது ஏற்கத்தக்கது அல்ல. தனிநபா்கள் குடமுழுக்குப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்கவும், பணம் வசூலிப்பதைத் தடுக்கவும் கோரி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, முத்துமாலை அம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், முத்துமாலை அம்மன் கோயில் குடமுழுக்கு தொடா்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டது. தற்போது இந்து சமய அறநிலைய துறையின் சாா்பில் இந்தக் கோயில் குடமுழுக்கு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

முக்கூடல் முத்துமாலை அம்மன் திருக்கோயில் குடமுழுக்கை அதன் செயல் அலுவலரே நடத்த வேண்டும். இதில் வேறு எந்தத் தனிநபா்களின் தலையீடும் இருக்கக் கூடாது. வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com