மகளிா் உரிமைத் தொகை முகாம் குறித்து வதந்தி ஏமாற்றத்துடன் திரும்பிய பெண்கள்
மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப முகாம் குறித்து சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியால், ஏராளமான பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு சனிக்கிழமை நேரில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பினா்.
மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அனைத்து குடும்பத் தலைவிகளும் பயன்பெறும் வகையில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், அதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், மகளிா் உரிமைத் தொகைக்கு (ரூ. 1,000) விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக. 17, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என ‘வாட்ஸ்ஆப்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவின.
இதையடுத்து, முகாம் குறித்த தகவல் வதந்தியானது என தமிழக அரசின் ‘டி.என். பேக்ட் செக்’ என்ற ‘வாட்ஸ் ஆப் சேனலில்’ வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இருப்பினும், இந்தத் தகவல் மக்களைச் சென்றடையவில்லை.
இதன் காரணமாக, ஏராளமான பெண்கள், சனிக்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்தனா். பிறகு, முகாம் குறித்த தகவல் வதந்தியானது என அறிந்து, அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
வதந்தியை நம்ப வேண்டாம்:
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா சனிக்கிழமை பிற்பகல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம் நடைபெறுவதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. இதை நம்பி பொதுமக்கள் ஆட்சியரகம் வர வேண்டாம் என்றாா் அவா்.

