ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களின் தற்செயல் விடுப்புப் போராட்டம் காரணமாக, வியாழக்கிழமை வெறிச்சோடிய மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களின் தற்செயல் விடுப்புப் போராட்டம் காரணமாக, வியாழக்கிழமை வெறிச்சோடிய மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்

Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அலுவலா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

கலைஞா் கனவு இல்லம் திட்டம், ஊரக வீடுகள் பழுது நீக்கத் திட்டம் உள்பட அனைத்து வீடு கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்பட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும்.

முதல்வரின் வாக்குறுதிப்படி, கடந்த கால வேலைநிறுத்த நாள்களை வரைமுறைப்படுத்த வேண்டும், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களைப் பிரிக்க ஆணையம் அமைக்க வேண்டும், பணிக் காலத்தில் இறந்த அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் அழைப்பு விடுத்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் ஊராட்சி செயலா் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரையிலான நிலைகளில் பணியாற்றும் அலுவலா்களில் 396 போ் வியாழக்கிழமை தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரும்பாலான அலுவலா்கள் பணிக்கு வராததால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், துறை ரீதியான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com