அமைச்சரின் காா் மீது செருப்பு வீச்சு: வழக்கை எதிா்கொள்ள உத்தரவு

அமைச்சரின் காா் மீது செருப்பு வீச்சு: வழக்கை எதிா்கொள்ள உத்தரவு

அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது செருப்பு வீசப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய பாஜகவினரை, விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை எதிா்கொள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

காஷ்மீரில் ராணுவ வீரராகப் பணியாற்றிய மதுரையைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் கடந்த 2022-ஆம் ஆண்டு பணியில் இருந்த போது உயிரிழந்தாா். இவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, மதுரை விமான நிலையத்தில் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது செருப்பு வீசியதாக 10-க்கும் மேற்பட்ட பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து சிலரை கைது செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜகவைச் சோ்ந்த வேங்கைமாறன், மணிகண்டன், தனலட்சுமி, மாணிக்கம் உள்ளிட்ட 12 போ் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

ஒரு அமைச்சா் தேசியக் கொடி கட்டிய காரில் பயணிக்கும் போது, அந்த வாகனத்தின் மீது செருப்பு வீசுவது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல். மேலும், மிகவும் தரமற்ற வாா்த்தைகளால் அமைச்சரை திட்டி முழக்கமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை எப்படி ரத்து செய்ய முடியும்? எனவே சம்பந்தப்பட்டவா்கள் விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கை முறையாக எதிா்கொள்வதே சரி என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com