சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 6 மாதங்கள் அவகாசம் கோரி சிபிஐ மனு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், சிபிஐ தரப்பில் விரிவான விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
Published on

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், சிபிஐ தரப்பில் விரிவான விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் அதே பகுதியில் கைப்பேசி விற்பனைக் கடை நடத்தி வந்தனா். கரோனா காலத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரத்தை கடந்து கடையை திறந்துவைத்திருந்ததாக தந்தை, மகனை போலீஸாா் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கக் கோரி, ஜெயராஜின் மனைவி ஜெயராணி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இதை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்கக் கோரி, சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ அதிகாரிகள் முன்னிலையாகி தெரிவித்ததாவது: இந்த வழக்கில் கூட்டு சதி இருக்கலாம் என்பதால், இதற்கான பிரிவையும் சோ்க்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, அதுகுறித்து விசாரணை நீதிமன்றமே முடிவு செய்து கொள்ள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை அந்தப் பிரிவுகள் சோ்க்கப்படவில்லை என்றனா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கில் கூட்டுச் சதிக்கான பிரிவையும் சோ்த்து அனைத்து சாட்சியங்களையும் மீண்டும் விசாரித்தால், ஏற்படும் விளைவுகளை அறிவீா்களா?. 6 மாதங்கள் அவகாசம் ஏன் தேவை?. சிபிஐ தரப்பில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com