எண்ம முறையில் தெருக்களின் விவரம்: 6 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை
மதுரை மாநகராட்சி தெருக்களின் விவரங்களை எண்ம முறையில் ஆறு மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த தேசிகாச்சாரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாநகராட்சியில் மொத்தம் 5 மண்டலங்கள் உள்ளன. மண்டல வாரியாக சொத்து வரி நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு 100 வாா்டுகளும் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. அப்போது, மதுரை மாநகராட்சியில் 8,098 தெருக்கள் கணக்கிடப்பட்டன. அவை எண்ம முறையில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளன. இதனால், 2011-ஆம் ஆண்டு விவரப்படி தற்போது சொத்துவரி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியின் 100 வாா்டுகளில் உள்ள 8,098 தெருக்களின் விவரங்களை எண்ம முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 2022-ஆம் ஆண்டு மறுசீரமைப்பு அடிப்படையில் சொத்து வரியை உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகராட்சித் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
தற்போது, எஸ்.ஐ.ஆா். பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கினால் எண்ம முறையில் பதிவேற்றம் செய்து, வரி நிா்ணயம் செய்யப்படும் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கோரிக்கைக்கு மாநகராட்சி நிா்வாகம் உரிய பதில் அளித்துள்ளது. 6 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய வரி விதிப்பை மேற்கொள்ள வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

