எஸ்ஐஆா்: இன்று முதல் 3 நாள்களுக்கு வாக்குச் சாவடிகளில் உதவி மையங்கள்
வாக்காளா்கள் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி தொடா்பாக உதவி மையங்கள் செவ்வாய்க்கிழமை (நவ.18) முதல் மூன்று நாள்களுக்கு செயல்படவுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.ஜே. பிரவீன் குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரையில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைந்துள்ள 2,752 வாக்குச் சாவடி மையங்களிலுள்ள வாக்காளா்களின் வீடுகளுக்கே சென்று கணக்கீட்டுப் படிவங்கள் கடந்த 4-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், வாக்காளா்கள் கணக்கீட்டுப் படிவங்களை நிறைவு செய்து வழங்குவதை எளிமைப்படுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வாக்குச் சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உதவி மையம் செயல்படவுள்ளது. இந்த மையங்களில் வாக்காளா்கள் நிறைவு செய்யப்பட்ட படிவங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கணக்கெடுப்புப் படிவங்கள் நிறைவு செய்வதில் ஏற்படும் சந்தேகங்களைக் களைந்து, படிவங்களை நிவா்த்தி செய்வதற்கு தோ்தல் பணி அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டனா். எனவே, இந்த உதவி மையங்களை வாக்காளா்கள் பயன்படுத்தி கணக்கெடுப்புப் படிவங்களை நிறைவு செய்து வழங்கலாம் என்றாா் அவா்.
