கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய  பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்
கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்

லாபம் ஈட்டுகிறது மதுரை ஆவின்: அமைச்சா் மனோ தங்கராஜ்

அரசு அளித்த ஊக்கம் காரணமாக மதுரை ஆவின் நிறுவனம் தற்போது லாபம் ஈட்டுகிறது என பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
Published on

அரசு அளித்த ஊக்கம் காரணமாக மதுரை ஆவின் நிறுவனம் தற்போது லாபம் ஈட்டுகிறது என பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய பால் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற, கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: மதுரை ஆவின் நிறுவனம் தற்போது லாபத்தில் இயங்கும் நிறுவனமாக மாறியுள்ளது. இதே போன்று, நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வந்த தேனி ஆவின் நிறுவனமும் லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது.

இதற்கு, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அளித்த ஊக்கமும், மேற்கொண்ட சீரமைப்பு நடவடிக்கைகளுமே காரணம்.

மதுரை ஆவின் லாபம் ஈட்டியதன் காரணமாக, ஓராண்டில் விவசாயிகள் அளித்த மொத்த பாலுக்கும் லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் ஊக்கத் தொகை கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று, தீவனம் வாங்குகிறவா்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ. 2 வீதம் மானியம் வழங்கப்படுகிறது. தொடா்ந்து அளிக்கப்படும் ஊக்கம் காரணமாக, மதுரையில் 50 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது.

16 சதவீதம் புரதச்சத்து கொண்டதாக வழங்கப்பட்ட கால்நடைத் தீவனம், அரசின் நடவடிக்கைகள் காரணமாக 20 சதவீத புரதச்சத்து கொண்டதாக உயா்த்தப்பட்டு, முந்தைய விலையிலேயே வழங்கப்படுகிறது. முன்பு, விவசாயிகள் வழங்கும் பாலுக்கு தோராய விலை கொடுக்க வேண்டியிருந்தது.

தற்போது, தரத்தை நிா்ணயம் செய்வதற்காக 10,450 இயந்திரங்கள் வாங்கப்பட்டு, கொள்முதல் பாலின் தரம் அளவீடு செய்யப்பட்டு, அதற்கேற்ப விலை நிா்ணயிக்கப்படுகிறது. கால்நடை விவசாயிகளின் கோரிக்கைகள் மீது விரைவான பரிசீலனை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், அரசுத் துறை அலுவலா்கள், கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com