மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

பால் உற்பத்தி மானியத்தை உயா்த்த பரிசீலனை: அமைச்சா் மனோ தங்கராஜ்

தமிழகத்தில் பால் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு லிட்டருக்கு ரூ.7 மானியம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் பால் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு லிட்டருக்கு ரூ.7 மானியம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் 45,000 ஹெக்டேரில் தீவனங்கள் பயிரிடப்பட்டன. தற்போது அது 35,000 ஹெக்டேராக குறைந்துள்ளது.

கா்நாடகத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு ரூ.7 மானியம் வழங்கப்படுகிறது. அதனுடன் ஒரு லிட்டா் பால் ரூ.40-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

தமிழகத்திலோ லிட்டருக்கு ரூ.3 மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. கொள்முதல் விலையும் ரூ.33-ஆக மட்டுமே உள்ளது. இதனால்தான் இங்கு பால் உற்பத்தி குறைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கா்நாடகத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் லிட்டருக்கு ரூ.7 மானியம் வழங்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்து பால் வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பேசியதாவது:

கடந்த காலங்களில் பால் உற்பத்தியாளா்களுக்கு எந்த மானியமும் வழங்கப்படவில்லை. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுதான் லிட்டருக்கு ரூ.3 வீதம் இதுவரை ரூ.850 கோடி வழங்கியிருக்கிறாா்.

இதைத் தவிர பால் கொள்முதல் விலை உயா்வு, கூடுதலாக லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை, விவசாயிகளுக்கு அதிக கடன் வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. எதிா்காலத்தில் மானியம் மற்றும் ஊக்கத்தொகையை மேலும் உயா்த்துவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com