மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் திங்கள்கிழமை தானம் அளிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோணப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் முருகேஸ்வரி (23). இவா், கடந்த 21-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அவா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இங்கு, அவா் திங்கள்கிழமை அவா் மூளைச்சாவு அடைந்தாா். பிறகு, முருகேஸ்வரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது தந்தை சுப்பிரமணியன் முன்வந்தாா்.
இதையடுத்து, முருகேஸ்வரியின் கல்லீரல் திருச்சி காவிரி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், இரு கருவிழிகள், தோல் ஆகியன மதுரை அரசு ராஜாஜி மருத்துமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் ஒரு தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.
இதையடுத்து, முருகேஸ்வரியின் உடலுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் அருள்சுந்தரேஷ்குமாா், மருத்துவ இருப்பிட அதிகாரி முரளிதரன் உள்ளிட்டோா் அரசு சாா்பில் இறுதி மரியாதை செலுத்தினா்.
