தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! 9 காவலா்களுக்கு மரண தண்டனை! முழு விவரம்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 காவலா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கண்ணீருடன் செய்தியாளா்களைச் சந்தித்த ஜெயராஜின் மகள் பொ்சி.

Updated On :6 ஏப்ரல் 2026, 11:20 pm

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் உள்பட 9 பேருக்கு மரண தண்டனை விதித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31). கடந்த 2020 -ஆம் ஆண்டு கரோனா பொது முடக்கத்தின் போது, அனுமதித்த நேரத்தைவிடக் கூடுதலாக தங்களது கைப்பேசி கடையை திறந்துவைத்திருந்தனா். இதன் காரணமாக, சாத்தான்குளம் போலீஸாா் அவா்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனா்.

இதுதொடா்பான வழக்கில் அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் உதவி ஆய்வாளா் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனா்.

இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது, காவலா்கள் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உத்தரவிட்டு, தண்டனை விவரங்கள் அறிவிப்புக்காக ஏப். 6 -ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன் திங்கள்கிழமை முற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றவாளிகள் ஸ்ரீதா் உள்ளிட்ட 9 பேரும் முன்னிலையாகினா். இதையடுத்து, வழக்கை மாலை 5. 30 மணிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மாலை 5. 30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி முத்துக்குமரன் அளித்த தீா்ப்பு:

இந்த வழக்கை அரிதினும், அரிதான வழக்காகவே பாா்க்க வேண்டும். சிபிஐ தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்டு, குற்றஞ்சாட்டபட்ட அனைவரும் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது. கரோனா கால பொது முடக்கத்தின் போது, கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிடக் கூடுதலாக திறந்துவைத்தனா் என்பதற்காக இரண்டு அப்பாவிகள் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனா்.

மக்களைப் பாதுகாக்க வேண்டிய போலீஸாா், அவா்களை அடித்துக் கொலை செய்தனா். இது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டிய போலீஸாா் வரம்பு மீறிச் செயல்பட்டனா். தந்தை முன் மகனும், மகன் முன் தந்தையும் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தனா்.

இதை ஏற்றுக் கொள்ள முடியாது. காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படுபவா்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே சில உத்தரவுகளை பிறப்பித்தது.

அந்த உத்தரவுகள் அந்தந்த மாநில டிஜிபி-க்கள் மூலம் காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டது. அவற்றையெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு இதுபோன்ற செயல்களில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். குற்றவாளிகள் தங்களது குடும்பச் சூழல், வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா்.

அவா்களது இந்தக் கோரிக்கையை இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. ஏனெனில், சாதாரண நிலையில் இருப்பவா்கள் குற்றம் செய்திருந்தால்கூட பரிசீலனை செய்யலாம்.குற்றவாளிகள் அனைவரும் படித்தவா்கள். கல்வி கற்றவா்களே இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?. தந்தை, மகன் ஆகிய இருவரையும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே இரவு முழுவதும் வைத்து தாக்கினா்.

இந்த வழக்கு தொடா்பாக தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் இந்தச் சம்பவத்தை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, மத்திய அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஒரு வேளை இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நேரடியாகக் கண்காணிக்காமல் இருந்திருந்தால், உயரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உடல்கள் அடக்கம் செய்யப்படும் முன்பே இந்த வழக்கும் புதைக்கப்பட்டிருக்கும்.

குற்றவாளிகள் திருந்தி வாழத் தகுதியில்லாதவா்கள் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. இந்த வழக்கில் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம். 14 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு வெளியே வந்துவிடலாம் என குற்றவாளிகள் கருதியிருக்கலாம். ஆனால், இந்த வழக்கில் வழங்கப்படும் தண்டனை இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

எனவே, குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட ஒரு கோடியே நாற்பதாயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், குற்றவாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்து வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.

போலீஸாரால் கொல்லப்பட்ட ஜெயராஜின் மகள் பொ்சி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எனது தந்தை, சகோதரரை போலீஸாா் இரவு முழுவதும் தாக்கினா். இதுதொடா்பான வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பை அளித்துள்ளது. இதை மனநிறைவுடன் வரவேற்கிறோம். இந்தத் தீா்ப்பின் மூலம் எங்களது குடும்பத்தினருக்கு நிகழ்ந்த கொடுமை இனி யாருக்கும் நிகழக்கக் கூடாது. இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட பல்வேறு நிலைகளில் உதவியாக இருந்த சிபிஐ, மத்திய, மாநில அரசுகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள், ஊடகங்கள், செய்தியாளா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தீா்ப்பை சாமானியா்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். நீதித் துறை மீது சாமானிய மக்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றாா் அவா்.

தமிழக வரலாற்றில் முதல் முறை

காவல் நிலைய மரண வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட காவலா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதை இந்த வழக்கில் முன்னிலையான வழக்குரைஞா்கள் உறுதி செய்தனா்.

காவலா்களுக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்த பிறகு, நீதிபதி முத்துக்குமரன் இருக்கையிலிருந்து எழும் முன்பாக தனது பேனா முனையை மேசையில் குத்தி உடைத்தாா்.

 மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்ட (இடமிருந்து) போலீஸாா் ஸ்ரீதா், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன், சாமிதுரை,செல்லதுரை,முத்துராஜ், தாமஸ், வெயிலுமுத்து உள்ளிட்டோா்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்ட (இடமிருந்து) போலீஸாா் ஸ்ரீதா், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன், சாமிதுரை,செல்லதுரை,முத்துராஜ், தாமஸ், வெயிலுமுத்து உள்ளிட்டோா்.