சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட காவல் துறையினா் மேல் முறையீடு செய்ய மீண்டும் அவகாசம் அளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்தவா் வணிகா் ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ் (31). கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பொது முடக்கம் அமலில் இருந்தபோது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து ஜெயராஜ் தனது கைப்பேசி கடையைத் திறந்து வைத்திருந்தாராம். இதற்காக ஜெயராஜை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் கடுமையாகத் தாக்கினா்.
தந்தையை மீட்பதற்காக காவல் நிலையத்துக்குச் சென்ற பென்னிக்ஸையும் போலீஸாா் கடுமையாகத் தாக்கினா். காவல் துறையினரின் கடுமையான தொடா் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தனா்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 போலீஸாா் கைது செய்யப்பட்டனா். இவா்களில் உதவி ஆய்வாளா் பால்துரை உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கு விசாரணை முடிந்த பின்னா், குற்றஞ்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் கடந்த 6-ஆம் தேதி தீா்ப்பளித்தாா்.
இந்த நிலையில், 9 பேருக்குமான மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி, சிபிஐ சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் தண்டனை பெற்ற 9 பேரும் தீா்ப்பு நகலை அடிப்படையாகக் கொண்டு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட காவல் துறையினா் 9 பேரும் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையாகினா்.
அப்போது, காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் வழக்கு தொடா்பாக தானே முன்னிலையாகி வாதங்களை முன்வைக்க விருப்பதாகவும், ஆவணங்களை சேகரிக்க 15 நாள்கள் பரோலில் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரினாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கைப் பொருத்தவரை, 6-ஆவது குற்றவாளி மட்டும் மேல் முறையீடு செய்துள்ளாா். காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தானே முன்னிலையாகி வாதங்களை முன்வைக்க விருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீதா் கோரியபடி பரோல் வழங்க இயலாது. தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேல்முறையீடு தாக்கல் செய்யாத பிற குற்றவாளிகள் விரைவில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படுகிறது. வழக்கு விசாரணை வருகிற ஜூன் 4- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினத்திலிருந்து இந்த வழக்கு தொடா் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! 9 காவலா்களுக்கு மரண தண்டனை! முழு விவரம்

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளான காவலா்களுக்கு மரண தண்டனை வழங்க நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நாளை தீா்ப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


