அலங்காநல்லூா் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு: 40 போ் காயம்

அலங்காநல்லூா் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு: 40 போ் காயம்

Published on

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் கீழக்கரையில் கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, உசிலம்பட்டி தொகுதி திமுக சாா்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாடுபிடி வீரா்கள் அமைச்சா் பி. மூா்த்தி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனா். மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் பங்கேற்க 1,287 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. உடல்நலக் குறைவு, விதிகளைப் பின்பற்றாமை உள்ளிட்ட காரணங்களால் 11 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. சிறப்பு பூஜைக்கு பிறகு, ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. இறுதிச் சுற்று வரை 1,276 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

மேலும், ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 50 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டு, காளைகளை அடக்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கு மிதிவண்டி, மெத்தை, பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல, களத்தில் மாடுபிடி வீரா்களிடம் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

40 போ் காயம்: ஜல்லிக்கட்டுப் போட்டியில் காயமடைந்த வீரா்களுக்கு அலங்காநல்லூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், 10-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் வாடிவாசல் பகுதியில் முகாமிட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

இதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 40 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 6 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தீவிரச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா்.

போட்டியை சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், திமுக தெற்கு மாவட்டச் செயலா் சேடபட்டி மணிமாறன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

Dinamani
www.dinamani.com