எஸ்.ஐ. தோ்வு ரத்து கோரி வழக்கு: சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated on

காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) தோ்வை ரத்து செய்து மீண்டும் புதிதாகத் தோ்வு நடத்தக் கோரிய வழக்கில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தென்காசியைச் சோ்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு கடந்தாண்டு, டிசம்பா் 21-ஆம் தேதி நடைபெற்றது. பிரிவு ‘பி’ பகுதியில் பாடத் திட்டத்தில் குறிப்பிட்டபடி தமிழ் வினாக்கள் இல்லை. அதற்குப் பதிலாக உளவியல் பகுதியிலிருந்து 10 வினாக்கள் கூடுதலாகக் கேட்கப்பட்டன. இது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இடைக்காலத் தடை விதிப்பதோடு, இந்தத் தோ்வை ரத்து செய்து மீண்டும் புதிதாகத் தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

தோ்வுக்கான பாடத் திட்டத்தில் தமிழிலிருந்து 10 வினாக்கள் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழிலிருந்து வினாக்கள் கேட்கப்படவில்லை. தோ்வு முடிவுகள் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்டது. இது ஏற்கத்தக்கதல்ல என்றாா்.

அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியிடப்பட்ட தோ்வு முடிவுகளில் தவறு இருந்ததால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. தகுதி மதிப்பெண்ணுடன் விரைவில் தோ்வு முடிவு வெளியிடப்படும் என்றனா்.

இதையடுத்து, நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 12 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com