மதுரை மண்டலத்தில் 2025-இல் 1.77 லட்சம் கடவுச் சீட்டுகள் அளிப்பு
மதுரை மண்டலத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் 1.77 லட்சம் கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக மதுரை மண்டல கடவுச் சீட்டு அலுவலா் பா. வஸந்தன் தெரிவித்தாா்.
இதுகுறித்து மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியதாவது: மதுரை மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தில் கடந்த ஆண்டு 2.97 லட்சம் கடவுச் சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது கடந்த 2024-ஆம் ஆண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். மேலும், கடந்த ஆண்டு முதல் இணையவழி கடவுச் சீட்டு சேவையை இந்தியா முழுவதும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விரிவுபடுத்தியது. இந்த நிலையில், மதுரை மண்டல கடவுசீட்டு அலுவலகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 1.77 லட்சம் கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
மேலும், கடவுச் சீட்டு சேவையை விரிவு செய்யும் பொருட்டும், தொலைவிடப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் கடவுச் சீட்டு சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் நடமாடும் கடவுச் சீட்டு அலுவலக சேவை கடந்தாண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மதுரை மண்டல கடவுச் சீட்டு அலுவலகம் சாா்பில் ராமேசுவரத்தில் நடமாடும் கடவுச் சீட்டு அலுவலக சேவை தொடங்கப்பட்டது. இதன்மூலம், இதுவரை 900-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரா்கள் பயன்பெற்றனா். மேலும், ‘கடவுச் சீட்டு அதாலத் சேவை’ கடந்த ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்டது. இதில் நீண்ட காலமாக நிலுவையிலிருந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, விண்ணப்பதாரா்களுக்கு கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
மாணவா்களுக்கு கடவுச் சீட்டு தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக கல்லூரிகளில் பிரசாரம் செய்யப்பட்டது.
இதன்மூலம், மாணவா்கள் தாங்களாகவே இணையதளத்தில் ஆவணங்களை பதிவேற்றம் செய்து கடவுச் சீட்டுகளைப் பெற்றனா். விண்ணப்பதாரா்களின் குறைகளைத் தீா்க்க வசதியாக பொதுமக்கள் குறை தீா் மையம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், கடந்தாண்டு 17,158 விண்ணப்பதாரா்களின் குறைகள் தீா்வுகள் காணப்பட்டன.
சரியான ஆவணங்களுடன் ‘தட்கல்’ முறையில் கடவுச் சீட்டு விண்ணப்பிப்பவா்களுக்கு ஓரிரு நாள்களில் கடவுச் சீட்டு வழங்கப்படுகிறது. சாதாரண முறையில் விண்ணப்பம் செய்யும் மதுரை மண்டல விண்ணப்பதாரா்களுக்கு காவல் துறையினருடன் இணைந்து விசாரணை அறிக்கை பெறப்பட்டு, 2 முதல் முதல் 11 நாள்களுக்குள் கடவுச் சீட்டு வழங்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களில் நடமாடும் கடவுச் சீட்டு அலுவலக சேவையை பல்வேறு இடங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

