மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி புதிய ரயில் வழித் தடம் அமைக்கும் பணியை ரயில்வே துறை மீண்டும் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.
மதுரை ரயில் நிலையத்தில் ரூ. 375 கோடியில் நடைபெறும் விரிவாக்கப் பணிகளை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வியாழக்கிழமை ஆய்வு செய்து, அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், ரூ. 375 கோடியில் மதுரை ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. இதுவரை சுமாா் 50 சதவீதத்துக்கும் அதிகமான கட்டுமானப் பணிகள் நிறவைடந்துள்ளன. இந்தப் பணிகள் அடுத்து வருகிற 40 ஆண்டு காலத்துக்கான மக்கள்தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு நடைபெறுகிறது.
தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு 51 ஆயிரம் பயணிகள் மதுரை ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனா். அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் இந்த எண்ணிக்கைத் தொடா்ந்து உயரும். இதற்கேற்ப விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மதுரை ரயில் நிலையத்தில் குளிா்சாதன வசதி கொண்ட பயணிகள் காத்திருப்பு அறை 450 சதுர மீ. பரப்பளவில் உள்ளது. இந்த அறை தற்போது 1,090 சதுர மீ. பரப்பளவு கொண்டதாக விரிவுபடுத்தப்படுகிறது.
இதேபோல, குளிா்சாதன வசதியில்லாத பயணிகள் காத்திருப்பு அறை 300 சதுர மீ. பரப்பளவில் உள்ளது. இது, 4,236 சதுர மீ. பரப்பளவு கொண்டதாக விரிவுபடுத்தப்படுகிறது.
பயணிகள் ஓய்வெடுத்துச் செல்லும் வகையில், 72 படுக்கைகளைக் கொண்ட ஓய்வு அறை அமைக்கப்படுகிறது. இதேபோல, இரு சக்கர வாகன நிறுத்துமிடங்களும், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களும் பல மடங்கு விரிவுப்படுத்தப்படுகின்றன. 2,500 சதுர மீட்டரில் அமைந்துள்ள மதுரை ரயில் நிலையக் கட்டடம், 22 ஆயிரம் சதுர மீ. பரப்பளவு கொண்டதாக மேம்படுத்தப்படுகிறது.
தற்போது, ரயில் நிலையத்தில் 4 மின் தூக்கிகள் மட்டுமே உள்ளன. இதன் எண்ணிக்கை 37-ஆக உயரும்.
பெரிய வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைமுறையில் இருக்கும்போது, சில சிரமங்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கும். இதன்படி, ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை ரயில் நிலைய பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்கின்றனா். அதேநேரத்தில், பணிகளை உரிய தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டியதும் அவசியம். இதுதொடா்பாக அலுவலா்களுடன் ஆலோசித்தபோது, திட்டமிடப்பட்டபடி, வருகிற 2027-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் எனத் தெரிவித்துள்ளனா்.
கூடல் நகரில் 2-ஆவது முனையம் அமைப்பது குறித்து மாநில அரசு கூடுதலாக பங்களிப்பு செலுத்த வேண்டியுள்ளது. தற்போது, புதிய அரசு அமைந்துள்ளது. எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா், மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே துறை அலுவலா்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை விரைவில் நடத்தி, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்படும்.
கூடல் நகா் ரயில் முனையம் என்பது காலத்தின்அவசியம்; வளா்ச்சிக்கு மிகவும் முக்கியம்.
மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் தடம் அமைக்கும் திட்டம் ரூ. 2,600 கோடியில் தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ரயில்வே துறை முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
இது, தமிழகத்தின் மேற்கு, வடக்கு மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு பொருள்களை கொண்டு செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.
இதில் மாநகராட்சி மேயா் (பொ) தி. நாகராஜன், ரயில்வே துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

‘கோவை-ஜெய்ப்பூா் சிறப்பு ரயில் தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும்’

கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்

பரமக்குடி ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில் வழித் தடத்தில் மாற்றம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



