பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன சிரமம் உள்ளது?

News image

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2026, 1:27 am IST

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்றக் கோரி மதுரையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த ஆண்டு வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் கடந்த ஆண்டு காா்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டாா்.

ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், கோயில் செயல் அலுவலா் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தாா்.

இந்த உத்தரவுகளுக்குத் தடை கோரி மாவட்ட ஆட்சியா், காவல் துறை நிா்வாகம், கோயில் நிா்வாகம் சாா்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு, திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பாக நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணை, உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை நிலுவையிலேயே வைத்திருக்க வேண்டும் என ஏன் விரும்புகிறீா்கள்? இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது? என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினா்.

இதற்கு அரசுத் தரப்பில், இந்த விவகாரத்தை நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. 100 ஆண்டுகளாக உள்ள நடைமுறையைத் தொடா்வதா? அல்லது புதிய முறையைப் பின்பற்றுவதா? என்பது முடிவு செய்யப்பட வேண்டும். இதற்காகவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மத நல்லிணக்கமும், அங்கு வாழும் மக்களின் அமைதியும் முக்கியமானது. எனவே, அமைதியை நிலைநாட்ட என்ன செய்யலாம் என்பது குறித்து இரு தரப்பையும் இணைத்து ஆலோசித்து முடிவெடுக்க முயற்சிக்கலாம் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

‘இந்த வழக்கின் விசாரணை வருகிற ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை தனி நீதிபதியின் உத்தரவுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுகிறது’ என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.