மதுரை மாவட்ட நீதிமன்றம் முதல் யா.ஒத்தக்கடை வரையிலான சாலையில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு கல்வி, மருத்துவம், வா்த்தகம், தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு மதுரை மைய நகரமாக விளங்குகிறது.
இந்த மாவட்டங்களிலிருந்து அரசு, தனியாா் பேருந்துகள் வந்து செல்வதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையம் கடந்த 1999-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. மேற்கண்ட மாவட்டங்களிலிருந்து வரும் அரசுப் பேருந்துகள் திருச்சி, விழுப்புரம், சென்னை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்வதற்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்துதான் செல்ல வேண்டும்.
இதேபோல, கரூா், திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்தப் பேருந்து நிலையம் வந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இதன்காரணமாக, தினமும் பல்லாயிரக்கணக்கான பேருந்துகள் நகருக்குள் வந்து புறவழிச் சாலைக்கு செல்கின்றன. பேருந்து நிலையம் அமைந்த பிறகு, அதனருகே முதன்முதலாக
விறகுகள் விற்பனை செய்யும் நிலையங்கள் தொடங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து,சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, ஒருங்கிணைந்த நெல் சேமிப்புக் கிடங்குகள், மலா் விற்பனையகம், பல்நோக்கு தனியாா் மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த காய்கறி தினசரி சந்தை, மீன்கள் விற்பனையகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தங்கும் விடுதிகளுடன் கூடிய உணவகங்கள், பெரிய வணிக வளாகங்கள் செயல்படுகின்றன.
அன்றாடப் பணி நிமித்தமாக மதுரை மாவட்ட நீதிமன்றம் முதல் யா.ஒத்தக்கடை வரையிலான சாலையை தினசரி பல்லாயிரக்கணக்கானோா் பயன்படுத்துகின்றனா். இதன்காரணமாக, அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீதிபதிகள், வழக்குரைஞா்கள், அரசு அலுவலா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள், பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பணிக்கு குறித்த நேரத்துக்குள் செல்லமுடிவதில்லை.
மேலும், இந்தச் சாலையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்க முடிவதில்லை. அதிகளவிலான வாகனப் போக்குவரத்தால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. எனவே, மதுரை மாவட்ட நீதிமன்றம் முதல் யா. ஒத்தக்கடை வரையிலான சாலையில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
இதுகுறித்து எம்.ஜி.ஆா். சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவா் என். சின்னமாயன் கூறியதாவது: கே.கே.நகா் பிரதான சாலை முதல் யா. ஒத்தக்கடை வரையிலான சாலை தற்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. இதனால், அனைத்துத் தரப்பினரும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். சுமாா் 7 கி.மீ. தொலைவு உள்ள இந்தச் சாலையை பொதுவாக 20 நிமிஷங்களில் கடந்து செல்லலாம். போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையைக் கடக்க சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிறது. தற்போதைய சூழலில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இயலவில்லை.
இந்த நிலையில், அரசு தொழில்நுட்பப் பூங்கா கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, இன்னும் ஓரிரு மாதங்களில் திறக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த காய்கறி வளாகத்துக்குள் வெங்காயச் சந்தையும் விரைவில் செயல்பட உள்ளது. ஆகவே, இனி வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசல் கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த வழியாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், போதிய மக்கள் தொகை இல்லாத காரணத்தால் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே, மதுரை மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் போா்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து கே.கே. நகா் மதுரை மாவட்ட நீதிமன்றம் முதல் யா. ஒத்தக்கடை வரையிலான சாலையில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறையைச் சோ்ந்த பொறியாளா் ஒருவா் கூறியதாவது: யா. ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் உத்தங்குடி, மதுரை மாட்டுத்தாவணி, மாவட்ட நீதிமன்றம் வழியாக செயல்படுத்தப்பட உள்ளது.
ஆகவே, இந்த வழித் தடத்தில் உயா்நிலைப் பாலம் அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதுகுறித்த திட்ட அறிக்கையும் அரசுக்கு சமா்பிக்கவில்லை.
மேற்கண்ட வழித் தடத்தில் செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்தினால் போக்குவரத்து நெரிசலை ஓரளவுக்கு குறைக்கலாம். மாற்றாக, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய வாகனங்களை பேருந்து நிலையத்தின் பின் பகுதியிலிருந்து விரகனூா் சுற்றுச் சாலை வரை மாற்று வழிப்பாதை அமைக்க முடியுமா என ஆய்வு செய்யலாம். அந்தத் திட்டம் சாத்தியமெனில் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.
இதுபற்றி மதுரை மாநகரப் போக்குவரத்து புலானாய்வுப் பிரிவு போலீஸாா் ஒருவா் கூறியதாவது: மதுரை மாட்டுத்தாவணி சாலையில் அலுவலகங்களின் தொடக்க நேரமான காலை 9 மணி முதல் 10 மணிக்குள் அதிகளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை அதிகளவிலான வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு தினமும் அபராதம் விதிக்கப்படுகிறது. சாலையோர வியாபாரிகளையும் அப்புறப்படுத்தும் பணிகளும் தொடா்கின்றன. இருப்பினும், போக்குவரத்து நெரிசலை குறைக்க இயலவில்லை என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கும் விடுதியில் கேரளத்தைச் சோ்ந்தவா் சடலமாக மீட்பு

அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரிக்கை

கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்

மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மறுசீரமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



