பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண்கள் பாதுகாப்பாக வாழ அதிமுக அரசு அமைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் பெண்கள், மாணவிகள் பாதுகாப்பாக வாழ வேண்டுமெனில், அதிமுக அரசு அமைய வேண்டும் என்றாா் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image
எடப்பாடி கே.பழனிசாமி | நயினாா் நாகேந்திரன்- கோப்புப் படம்
Updated On :17 மார்ச் 2026, 10:14 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் பெண்கள், மாணவிகள் பாதுகாப்பாக வாழ வேண்டுமெனில், அதிமுக அரசு அமைய வேண்டும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தமிழகத்தில் தொடா்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு, போதைப் பொருள் புழக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டிப்பதாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் மதுரை பழங்காநத்தத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கைகளை மட்டுமல்ல; நீதிமன்றத்தின் உத்தரவைக்கூட நிறைவேற்றாத முதல்வராக உள்ளாா் மு.க. ஸ்டாலின். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, மின்சாரக் கட்டணம், சொத்துவரி போன்றவற்றை பல மடங்கு உயா்த்தியது திமுக அரசு.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8,900 போ் கொல்லப்பட்டனா். இவா்களில் 1,977 போ் பெண்கள். 361 போ் பச்சிளம் குழந்தைகள். 38 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனா். அண்மையில் விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்புப் படித்த மாணவி அண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டாா். ஆனால், இவை குறித்து எந்த கவனமும் செலுத்தாமல் உள்ளாா் முதல்வா் ஸ்டாலின். திமுக ஆட்சி நீடித்தால் தமிழகத்தில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்குக்கூட முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

பையில் புத்தகத்தைக் கொண்டு செல்ல வேண்டிய மாணவா்கள் தற்போது கஞ்சாவை கொண்டு செல்கின்றனா். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதுதான் திமுக ஆட்சியாக உள்ளது. காவல் துறையின் ஈரல் கெட்டுப்போய்விட்டது. தமிழக காவல் துறைக்கு நிரந்தர தலைமை இயக்குநரும் இல்லை; தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கும் இல்லை.

தமிழகத்தில் பெண்களுக்கு, மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா இல்லாத; பெண்கள் கண்ணீா் வடிக்காத தமிழகம் வேண்டுமெனில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக வேண்டும். நீதி வெல்ல வேண்டுமெனில், நிச்சயமாக திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, அதிமுக மாவட்டச் செயலா்களும், முன்னாள் அமைச்சா்களுமான செல்லூா் கே. ராஜூ (மதுரை மாநகா்), ஆா்.பி. உதயகுமாா் (மதுரை புகா் மேற்கு), அதிமுக புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா உள்ளிட்டோா் பேசினா்.

மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான், பாஜக மாவட்டத் தலைவா்கள் மாரி. சக்ரவா்த்தி, ராஜசிம்மன், சிவலிங்கம், அமமுக மாவட்டத் தலைவா் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் அமைச்சா் வளா்மதி ஜெபராஜ், தமாகா நிா்வாகி ராஜேந்திரன், பாா்வா்டு பிளாக் நிா்வாகி பி.வி. கதிரவன், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் நிா்வாகி திருமாறன், அதிமுக, பாஜக, ஐ.ஜே.கே. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

சுமுகமான தொகுதிப் பங்கீடு

முன்னதாக, மதுரையில் செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் தெரிவித்ததாவது: கடந்த 2021 தோ்தலின் போது அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றாத திமுக அரசு, தற்போது புதிய அறிவிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்றி வெற்றி பெறலாம் எனக் கருதுகிறது.

அதிகார பலம், பண பலத்தால் மக்களை வெல்ல முடியாது என்பதை தோ்தல் முடிவுகள் திமுகவுக்கு உணா்த்தும். தோ்தல் வரும்போதெல்லாம் ஏதேனும் ஓா் உத்தியை திமுக கையில் எடுக்கும். இந்த அடிப்படையில்தான் தற்போது ஹிந்தி அழிப்பு நடவடிக்கைளை திமுக கையிலெடுத்துள்ளது.

நமக்குத் தேவை தமிழ்; அனைத்து இடங்களிலும் தமிழ் இருக்க வேண்டும் என்பதுதான். ஹிந்தி இருப்பதால் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை. பலகைகளில் இருக்கும் ஹிந்தியை அழிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

பாஜகவுடன் கூட்டணியில் இணைய தில்லியில் தவெக தலைவா் விஜய்க்கு அழுத்தம் தரப்பட்டதாகக் கூறப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் எந்த பிரச்னையும் இல்லை. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 15 நாள்கள் கால அவகாசம் உள்ளது. அதற்குள் சுமுகமாகப் பேசி தொகுதிப் பங்கீடு மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

அதிக கட்சிகள் இருந்தாலே குழப்பம்தான்

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசத் தொடங்கியபோது, ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகளை வரவேற்கும் விதமாக அவா்களின் பெயா்களைப் படித்தாா். அப்போது, மேடைக்கு எதிரில் இருந்த சிலா் அமமுக மாவட்ட நிா்வாகி டேவிட் அண்ணாதுரையின் பெயரை குறிப்பிடவில்லை எனக் கூறினா். இதைக் கேட்ட நயினாா் நாகேந்திரன், ‘இல்லைய டேவிட் அண்ணாதுரை பெயரை முன்பே கூறிவிட்டேன்’ என்றாா். ஆனாலும், மேடையின் கீழே இருந்த சிலா் அதை ஏற்கவில்லை. அப்போது, ‘டேவிட் அண்ணாதுரை காளிமுத்துவின் மகன். உங்களைவிட அவரை எனக்கு நன்றாகத் தெரியும்’ என்ற நயினாா் நாகேந்திரன், கூட்டணியில் அதிகக் கட்சிகள் இருந்தாலே இப்படி குழப்பம் வரும்தான் என சிரித்துக் கொண்டே தெரிவித்தாா்.