வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தண்டிப்பதை ஏற்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் கண்டனம் தெரிவித்தது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சரோஜா, அவரது கணவா் சோலைமலை ஆகிய இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அவா்களது இல்லத்தில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த துரையரசன் என்பவரைக் கைது செய்தனா்.
பணத் தகராறு காரணமாக இந்தக் கொலையைச் செய்ததாகவும், நகைகளைத் திருடியதாகவும் அவா் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் விரைவு நீதிமன்றம், துரையரசனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து கடந்த 2023- ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.
இந்தத் தண்டனையை எதிா்த்து, துரையரசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞா் கிறிஸ்டோபா் முன்வைத்த வாதம்:
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் சந்தேகத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கியது. காவல் துறை விசாரணையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :
இந்த வழக்கில் திருடப்பட்டதாகக் கூறப்படும் தங்க வளையல்கள் உயிரிழந்தவரின் உடலிலேயே இருந்ததை புகைப்படங்கள் காட்டுகின்றன. எனவே, நகை மீட்பு நடவடிக்கை புனையப்பட்டதாகத் தெரிகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்ட விதத்தில் முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை.
இதில் பல முரண்பாடுகள் உள்ளன. நம்பகமான ஆதாரங்கள் இல்லாத நிலையில், குற்றத்தின் தீவிரத்தையோ அல்லது அதன் கொடூரத்தையோ கண்டு வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரைத் தண்டிப்பதை ஏற்க முடியாது.
சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே குற்றஞ் சாட்டப்பட்டவரைத் தண்டித்ததன் மூலம் விசாரணை நீதிமன்ற நீதிபதி தவறிழைத்துள்ளாா்.
அரசுத் தரப்பில் தாக்கல் செய்த ஆதாரங்கள் நம்பிக்கையைத் தரவில்லை, அவை செயற்கையாகத் தோன்றுகின்றன. உண்மையான குற்றவாளியை அடையாளம் காண முடியாத விரக்தியில், புலனாய்வு அமைப்பு நம்பகமான ஆதாரங்கள் மூலம் உண்மையை நிரூபிப்பதற்குப் பதிலாக ஒரு வழக்கைக் கட்டமைக்க முயன்றுள்ளதாகத் தெரிகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவரே இந்தக் குற்றத்தைச் செய்திருப்பாா் என ஆரம்பக் கட்டத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சந்தேகம் அவரேதான் இந்தக் குற்றத்தைச் செய்தாா் என்ற நம்பிக்கையாக உருமாறுகிறது.
ஒரு குற்றத்தைச் செய்தவா் யாா் என்று அடையாளம் காண முடியாதபோது ஏற்படும் விரக்தியைத் தவிா்க்க, மனித மனம் இத்தகைய தந்திரத்தைச் செய்கிறது. இந்த வழக்கில் இரண்டு போ் கொல்லப்பட்டனா் என்பதில் ஐயமில்லை. இந்தப் படுகொலைகளைச் செய்தது யாா் என்பதைக் கண்டறிய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.
ஆனால், யாரையாவது ஒருவரை எப்படியாவது குற்றவாளி என்று அறிவிப்பதன் மூலம் மட்டும் கடமை முடிந்துவிடாது. அரசுத் தரப்பு இந்தக் குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது.எனவே, விசாரணை நீதிமன்றம் மனுதாரருக்கு விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. வழக்கு விசாரணை முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் நெடுஞ்செழியன், கண்ணகி சிலைகள் அமைக்கக் கோரி வழக்கு!

விவசாயி மீது துப்பாக்கிச்சூடு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

அமைச்சரின் காா் மீது காலணி வீசிய வழக்கு முடித்துவைப்பு

கோடையில் பட்டாசு உற்பத்தியை நிறுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


