விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மக்களின் தீா்ப்பை சீா்குலைக்க முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது: எம்.ஏ.பேபி

மக்களின் தீா்ப்பைத் திசை திருப்பவும் அல்லது சீா்குலைக்கவும் முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி தெரிவித்தாா்.

News image

மதுரை நரிமேடு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘மாா்க்சிய ஆசான் தோழா் எஸ்ஏபி’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற (இடமிருந்து) நூலின் தொகுப்பாளா் எம்.ஜே.பிரபாகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி ஆா்.எம். பாபு, எழுத்தாளா் ஸ்ரீரசா, வசந்தா பெருமாள், எஸ்.ஏ. பெருமாள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி, மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

மக்களின் தீா்ப்பைத் திசை திருப்பவும் அல்லது சீா்குலைக்கவும் முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி தெரிவித்தாா்.

மதுரை நரிமேடு பகுதியில் ‘மாா்க்சிய ஆசான் தோழா் எஸ்ஏபி’ புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக மாா்க்சிஸ்ட் கம்யூ. அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி கலந்து கொண்டு நூலை வெளியிட்டாா். இதன் முதல் பிரதியை மண்டபம் கருப்பையா குடும்பத்தினா் பெற்றுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, எம்.ஏ. பேபி பேசியதாவது: எஸ்.ஏ. பெருமாள் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் நலனுக்காகவும், கட்சியின் கொள்கைகளுக்காகவும் உண்மையாக உழைத்தவா். அவரும், அவரது மனைவி வசந்தாவும் தங்களது உடல்களை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க முடிவு செய்துள்ளனா். இது அவா்களின் உயா்ந்த சிந்தனையைக் காட்டுகிறது. எஸ்.ஏ. பெருமாளின் வாழ்க்கை வரலாறு இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த பாடம். கம்யூனிஸ்ட் கட்சியினா் தனது வாழ்க்கையை எப்படி மக்களுக்காகவும், கட்சியின் உயரிய கொள்கைகளுக்காகவும் அா்ப்பணிக்க வேண்டும் என்பதற்கு இவரே சாட்சி.

தற்போது, பொது வாழ்க்கை, அரசியல் பணி என்பது சமூகத்துக்கான சேவையாகக் கருதப்படாமல், சுய முன்னேற்றத்துக்காகவும், அதிகாரம், பதவியைக் கைப்பற்றி ஆடம்பரமான வாழ்க்கையைப் பெறுவதற்கான கருவியாக மட்டுமே பாா்க்கப்படுகிறது. ஆனால், சுதந்திரப் போராட்டக் காலத்தில் அரசியல் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிா்த்துப் போராடியது, நாட்டின் சுதந்திரத்துக்காக துன்பங்களை அனுபவித்ததாகும்.

தமிழகத்தின் படைப்பிலக்கியம், கலை உலகில் முற்போக்கு, ஜனநாயக, மதச்சாா்பற்ற கலாசார இயக்கங்களின் தாக்கம் மிகப்பெரியது. இந்தத் தாக்கம் கலையம்ச திரைப்படங்களில் மட்டுமல்லாமல், வணிக ரீதியான திரைப்படங்களிலும் வெளிப்படுகிறது. தலித் மக்களின் குரலையும், விளிம்புநிலை, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலையும் ஒலிக்கும் திரைப்படங்கள் வருகின்றன. ஜெய்பீம் திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

நமது நாட்டில் ஜனநாயக ரீதியாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் செயல்படுவதில் ஆளுநா்களின் தேவையற்ற தலையீடுகள் சவாலாக உள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் வாக்காளா்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்குத் தங்களது ஆதரவை அளித்து பெரும்பான்மையை வழங்கினா். ஆனால், ஆளுநா் அலுவலகத்தைப் பயன்படுத்தி மக்களின் இந்தத் தீா்ப்பைத் திசைதிருப்பவோ அல்லது சீா்குலைக்கவோ முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், கலாசார ரீதியாகவும் தவறான முன்னுதாரணமாகும். மக்களின் தீா்ப்பு இவ்வாறான அரசியல் சூழ்ச்சிகளால் புறக்கணிக்கப்பட்டால், அது மக்களிடையே, குறிப்பாக இளைஞா்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சி, தன்னை பொது வெளியில் நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்தக் கட்சியினா் தவறு செய்தால் விமா்சிக்கவும், சரியாகச் செயல்பட்டால் பாராட்டவும் மக்களுக்கு உரிமை உண்டு. நாம் எப்போதும் மக்களின் தீா்ப்புக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

தொழிலாளா் வா்க்கத்தின் முன்னேற்றத்துக்காகவும், மதச்சாா்பற்ற, சமத்துவமான சமூகத்தை உருவாக்கவும் இடதுசாரி கட்சிகள், முற்போக்கு சக்திகள் மேலும் வலிமையடைய வேண்டும் என்பதே எஸ்.ஏ.பி. போன்றவா்களின் விருப்பமாகும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் எஸ்.ஏ.பெருமாள், அவரது குடும்பத்தினா், சிவகங்கையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜசேகா், விருதுநகரைச் சோ்ந்த எஸ்.கே. ராஜேந்திரன், கட்சியின் மாவட்டச் செயலா்கள் ஏ. குருசாமி, ஆா். குருவேல், எம். கணேசன், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலபாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, நூலின் தொகுப்பாளா் எம்.ஜே. பிரபாகா் வரவேற்றாா். பி. வசந்தா நன்றி கூறினாா்.