உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ஆணவக் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் - எவிடென்ஸ் அமைப்பு

News image
Updated On :56 நிமிடங்கள் முன்பு

தமிழத்தில் ஆணவக் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநா் ஏ. கதிா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து மதுரையில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 11,117 வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது 32 மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து தெரியவந்தது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 1,322 வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்றன. சிவகங்கை மாவட்டத்தில் 756, விழுப்புரம் மாவட்டத்தில் 709, புதுக்கோட்டை மாவட்டத்தில் 696, திருவண்ணாமலை மாவட்டத்தில் 696 வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. கடந்த 2024-இல் தமிழகத்தில் 1,103 வன்கொடுமைச் சம்பவங்களும், 2025-இல் 1,560 வன்கொடுமைச் சம்பவங்களும் நடைபெற்றன. ஓராண்டில் மட்டும் வன்கொடுமைச் சம்பவங்கள் 29 சதவீத அதிகரித்தன.

வன்கொடுமைச் சம்பவங்கள் தொடா்பான தகவல்களை அளிக்கக் கோரி, திருச்சி, திருவள்ளூா், தூத்துக்குடி, நாமக்கல், தென்காசி, தேனி, திருநெல்வேலி, சென்னை (கீழ்பாக்கம், தியாகராயா் நகா்) ஆகிய மாவட்டங்களில் உள்ள அலுவலா்களிடம் மேல்முறையீடு செய்தும் இதுவரை தகவல் அளிக்கப்படவில்லை. தகவல்களை தர மறுப்பது வெளிப்படைத் தன்மைக்கு எதிரானது. மேலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், கடந்த 11 ஆண்டுகளில் வன்கொடுமை வழக்குகள் 167 காவல் நிலையங்களில் விசாரணையில் உள்ளன. இதில் 78 வழக்குகள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் உள்ளது அதிா்ச்சியளிக்கிறது. 11,117 வன்கொடுமைச் சம்பவங்களில் 406 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது.

எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இந்த வழக்குகளில் தண்டனை சதவீதம் ஏன் குறைவாக இருக்கிறது என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்களை அழைத்து முதல்வா் விஜய் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். வன்கொடுமை வழக்குகளைக் கண்காணிக்க ஐஏஎஸ் தலைமையில் ஒரு அதிகாரியை மாநில அளவில் நியமிக்க வேண்டும்.

வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டவா்களுக்கும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் நிவாரணத் தொகையை ரூ. 25 லட்சமாக உயா்த்த வேண்டும். பட்டியலினத்தவா் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தும் நபா்களிடம் தலா ரூ. 5 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அறிவிக்க வேண்டும். வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வாதாட வழக்குரைஞா்களை அரசு நியமிக்க வேண்டும். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆணவக் குற்றங்களுக்கு எதிராக தனி சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்றாா் அவா்.