பழனியை அடுத்த பொருந்தல் கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருந்தல் கிராமத்திலிருந்து புளியம்பட்டி, ஓடைக்காடு, சண்முகம்பாறை பகுதிகளுக்கு செல்வதற்கு ஒரே சாலை தான் உள்ளது.
பொருந்தல் கிராமத்திலிருந்து சண்முகம்பாறை, புளியம்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இந்த வழியே தான் மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும், விவசாயிகளும் உரங்கள், விளை பொருள்களை டிராக்டரில் இந்த வழியில் தான் கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் தனியார் சிலர் இச்சாலையை இருபுறமும் கற்கள், முள்களை வைத்து சிறிது, சிறிதாக ஆக்கிரமித்து வருகின்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையாம்.
எனவே, சாலை ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொருந்தல் கிராம மக்கள், விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.