திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 70 பவுன் நகைகள், ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
திண்டுக்கல் கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்தவர் அருளானந்தம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் விக்டர் ஜோசப், மருமகள் ஜூலி வினிதா ஆகியோருடன், கோவிந்தராஜ் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். ஜூலி வினிதா, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், விக்டர் ஜோசப், ஜூலி வினிதா மற்றும் குடும்பத்தினருடன், நிலக்கோட்டை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டி பகுதியிலுள்ள புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனர்.
இதனிடையே தொழில் ரீதியாக வெளியிடங்களுக்கு சென்ற அருளானந்தம் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் சாவி விக்டர் ஜோசப்பிடம் இருப்பதை அறிந்து, அதனை பெறுவதற்காக சென்றுள்ளார். பின்னர், சாவியை பெற்றுக்கொண்டு நள்ளிரவு 1 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் அருளானந்தம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இரவு 10 முதல் நள்ளிரவு 1 மணிக்குள் நிகழ்ந்த இந்த திருட்டு சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.