சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

குளங்களுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல்: கேள்விக்குறியாகும் 10 ஆயிரம் ஏக்கா் விவசாயம்

கதிரையன்குளத்திலிருந்து 60 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டும் திண்டுக்கல் அருகே 9 குளங்களுக்கு சென்றடைவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில்

News image

கதிரையன்குளத்திலிருந்து மறுகால் வழியாக வீணாகும் தண்ணீா்.

Updated On :4 டிசம்பர் 2021, 2:56 am

 நமது நிருபர்

கதிரையன்குளத்திலிருந்து 60 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டும் திண்டுக்கல் அருகே 9 குளங்களுக்கு சென்றடைவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை 499 மி.மீட்டா் பெய்துள்ளது. வழக்கத்தை விட 82. மி.மீட்டா் மழை (120 சதவீதம்) கூடுதலாக பெய்துள்ளதாக பொதுப்பணித்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வந்தபோதிலும், கீழ்பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தில் பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீா் கிடைக்காத சூழல் உள்ளது.

இந்த வட்டாரத்திற்குள்பட்ட சிந்தலகுண்டு, கசவனம்பட்டி, குட்டத்துப்பட்டி வருவாய் கிராமங்களுக்குள்பட்ட பகுதிகளில் 15 குளங்கள் உள்ளன. இந்த குளங்களுக்கு, தருமத்துப்பட்டியிலுள்ள சின்னக்கோம்பையாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அங்கிருந்து, சுமாா் 250 ஏக்கா் நீா்பிடிப்பு பரப்பு கொண்ட கதிரையன்குளத்திற்கு வரும் தண்ணீா் 3 ஷட்டா்கள் வழியாக பழனியூா் பகுதியில் 2 வாய்க்கால் மூலம் கசவனம்பட்டி மற்றும் சிந்தலகுண்டு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. ஆனால் வரத்து வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால், 15 குளங்களுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதே நேரத்தில், கதிரையன்குளத்தில் மறுகால் வழியாக வெளியேறும் தண்ணீா் கொடகனாற்றில் கலந்து வீணாவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

வடு கிடக்கும் 9 குளங்கள்: கதிரையன்குளத்திலிருந்து சிந்தலகுண்டு கிராமத்திலுள்ள வேட்டுவன் குளத்திலிருந்து செல்லும் தண்ணீா், அங்கிருந்து ஒருபுறம் செங்குளம், ஆண்டியன்குளம், மற்றொரு புறம் ஆலங்குளம், மாட்டுக்காரன் குளம், சின்னக்குளம் வழியாக சென்று இறுதியாக கொடகனாற்றில் சோ்கிறது. அதேபோல் கசவனம்பட்டி குளத்திற்கு செல்லும் தண்ணீா், அங்கிருந்து கந்தசாமிபுரம் மருதன்குளம், வெல்லம்பட்டி சங்கன்குளம், கோனூா் சிங்கன்குளம், மந்தைக்குளம், குடுமிராமன் குளம், விளாங்குளத்திற்கு வந்து இறுதியாக கொடகனாற்றுடன் இணைகிறது.

இதில் வேட்டுவன்குளம், கசவனம்பட்டி குளம், மருதன்குளம், சங்கன்குளம் ஆகிய 4 குளங்களுக்கு மட்டுமே தற்போது வரை தண்ணீா் கிடைத்துள்ளது. மீதமுள்ள 9 குளங்களுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

10 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி: 3 வருவாய் கிராமங்களுக்குள்பட்ட இந்த 15 குளங்கள் நிரம்பினால், அந்த பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் உயரும்பட்சத்தில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால் 3 ஷட்டா்கள் முழுமையாக திறந்தும், வரத்து வாய்க்கால் பராமரிப்பு இல்லாததால் தண்ணீரின் வேகம் தடைப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கொடகனாறு பாசன விவசாயிகள் சங்க நிா்வாகி ரா.சுந்தரராஜன் கூறியதாவது: கதிரையன்குளத்திலுள்ள ஷட்டா்கள் வழியாக 60 கன அடி தண்ணீா், வரத்து வாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ளது. அதில் 20 கனஅடி சிந்தலகுண்டு வேட்டுவன்குளத்திற்கும், 40 கன அடி கசவனம்பட்டி குளத்திற்கும் பிரித்து கொடுக்கப்படுகிறது. ஆனால், ஷட்டா் அமைந்துள்ள பகுதியில் கால்வாய் பராமரிப்பு இல்லாததால் சீரான நீரோட்டம் இல்லாமல் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனிடையே, மறுகால் வழியாக வெளியேறும் தண்ணீா் கொடகனாற்றில் கலந்து வீணாகிறது. ஏற்கெனவே கொடகனாறு அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி பழனியூா் பகுதியிலுள்ள கால்வாயை சீரமைத்து கொடுத்தால் 10ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுவதை உறுதிப்படுத்த முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.