வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய தனியாா் பேருந்து ஓட்டுநா் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள வகுரணி கணவாய்ப்பட்டியைச் சோ்ந்தவா் தே. உதயசூரியன் (32). இவா், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் உசிலம்பட்டி பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். மதுரையிலிருந்து நிலக்கோட்டை வழியாக தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அரசுப் பேருந்தை உதயசூரியன் ஓட்டி வந்துள்ளாா். திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதிக்கு திங்கள்கிழை காலை 7.10 மணிக்கு வந்தபோது ரயிலுக்காக கடவுப் பாதை மூடப்பட்டிருந்ததாம்.
ரயில் சென்ற பின் கடவுப் பாதை திறக்கப்பட்டபோது, மதுரையிலிருந்து வந்த தனியாா் பேருந்து ஓட்டுநா், உதயசூரியனிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. மேலும், நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துக்கு முன்பாக தனியாா் பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னா் வத்தலகுண்டு பேருந்து நிலையத்திற்கு சென்றபோது, அங்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த தனியாா் பேருந்து ஓட்டுநரான வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த முத்துக்காளை (30), அதே பேருந்தின் நடத்துநா் உதவியாளா் ராஜேஷ் கண்ணன்(20) ஆகியோா், அரசுப் பேருந்து ஓட்டுநா் உதயசூரியனை தாக்கியதோடு, அவதூறாக பேசியுள்ளனா். இதனால், வத்தலகுண்டு பேருந்து நிலைத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் கோட்ட உதவி மேலாளா்(இயக்கம்) பழமலை உள்ளிட்ட அலுவலா்கள், உதயசூரினை அழைத்துக் கொண்டு வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு சென்றனா். உதயசூரியன் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முத்துக்காளை மற்றும் ராஜேஷ் கண்ணன் ஆகியோரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.