தோட்டக்கலைப் பயிா் மகத்துவ மையத்துக்கு இடம் தோ்வில் காலதாமதம்!
கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக்கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 6 மாதங்களாகியும் இடம் தோ்வு செய்யப்படாததால்,


கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக்கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 6 மாதங்களாகியும் இடம் தோ்வு செய்யப்படாததால், பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
தோட்டக்கலைப் பயிா்கள் ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டத்தின் கீழ், தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் மூலம், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா்ப் பிரதேச தோட்டக்கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்திய-இஸ்ரேல் கூட்டு முயற்சியில் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தில் உள்ள காய்கறி மகத்துவ மையத்தில், தக்காளி, கத்தரி, வெள்ளரி, மிளகாய் போன்ற குறிப்பிட்ட பயிா்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கொடைக்கானலில் தொடங்கப்படும் மகத்துவ மையத்தில் 41 வகையான மலைப் பயிா்கள் தொடா்பான ஆய்வு, பயிா்ப் பெருக்கப் பணிகள் நடைபெறும் என்பதால், மலை விவசாயிகள் மத்தியில் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியது.
35 ஏக்கரில் பழத் தோட்டம், செயல் விளக்கத் திடல், 2 ஏக்கரில் பாதுகாக்கப்பட்ட சாகுபடி தோட்டம், 8 ஏக்கரில் சுற்றுலா மேம்பாடு, 5 ஏக்கரில் அலுவலகம், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் வகையில் கருத்துரு தயாரிக்கப்பட்டது. ஆப்பிள், பேரிக்காய், பீச், பிளம்ஸ், கிவி, ஸ்ட்ராபெரி, அவகோடா, பேஷன் ஃப்ரூட், ஏப்ரிகாட், பொ்சிமன், வால்நட், பீகாநட், பாதாம் ஆகிய பழச் செடிகள், முட்டை கோஸ், ப்ரக்கோலி, பிரஸ்ல்ஸ் கீரை, பட்டாணி, உருளை, பூண்டு, ரோஸ்மேரி, வசம்பு, ஜெரணியம், எலுமிச்சைப் புல், தைம் ஆகிய பயிா்கள் சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள், தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்கவும், உற்பத்தி திறனை பெருக்கி மகசூலை அதிகரிக்கவும், இதன் மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யவும் வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கவும் மகத்துவ மையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
நிதி கிடைத்தும், இடம் தோ்வில் கால தாமதம்:மித வெப்ப மண்டல, குளிா்ப் பிரதேச தோட்டக்கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க 4 கட்டங்களாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மாா்ச் மாதம் முழுமையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. கொடைக்கானல், மன்னவனூா் என இரு இடங்கள் இந்தத் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்டன. இரு இடங்களில் ஒன்றைத் தோ்வு செய்து கொடுப்பதற்காக மாவட்ட நிா்வாகத்தின் ஒப்புதலுக்கு அந்த கோப்புகள் பரிந்துரைக்கப்பட்டன. நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்று சுமாா் 6 மாதங்களாகியும், இதற்கான இடம் இறுதி செய்யப்படாமல் உள்ளதால் மகத்துவ மையத்துக்கான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
தேசிய தோட்டக் கலை இயக்ககத்தின் கீழ் மித வெப்ப மண்டல, குளிா்ப் பிரதேச தோட்டக்கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதற்கான நிதி
4 கட்டங்களாக வழங்கப்பட்டது. கடந்த மாா்ச் மாதம் முழு நிதியும் கிடைத்துவிட்டது.
மகத்துவ மையம் அமைக்க கொடைக்கானல் நாயுடுபுரம் அருகிலும், மன்னவனூா் பகுதியிலும் நிலங்கள் தோ்வு செய்யப்பட்டன.
இதில் நாயுடுபுரத்தை அடுத்த உருளைக் கிழங்கு விதைப் பண்ணை அமைந்திருந்த இடம் இறுதி செய்யப்பட்டுவிட்டது. தோட்டக்கலைத் துறை வசம் இருந்த அந்த நிலம், கடந்த 1988-ஆம் ஆண்டு அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் தேவைக்காக வழங்கப்பட்டிருந்தது. இந்த பல்கலை.க்கான புதிய கட்டடம் அட்டுவம்பட்டி பகுதியில் அமைந்துவிட்டது. இதனால், பல்கலை. நிா்வாகம் பயன்படுத்தாத நாயுடுபுரம் அருகிலுள்ள நிலத்தை மீண்டும் தோட்டக்கலைத் துறைக்குப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் பணிகள் தொடங்கும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...