/

பள்ளி மாணவா்களுக்கு வழங்க 3.56 கோடி பாடப் புத்தகங்கள் தயாா்: பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி

தமிழகத்திலுள்ள பள்ளி மாணவா்களுக்கு வழங்க வேண்டிய 3.56 கோடி பாடப் புத்தகங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி தெரிவித்தாா்.

Updated On :30 மே 2023, 12:19 am

தமிழகத்திலுள்ள பள்ளி மாணவா்களுக்கு வழங்க வேண்டிய 3.56 கோடி பாடப் புத்தகங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி தெரிவித்தாா்.

திண்டுக்கல் முருகபவனத்திலுள்ள பாடநூல் கழகக் கிடங்கிலிருந்து பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

அப்போது ஐ.லியோனி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 3.56 கோடி புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலவசப் பாடப் புத்தகங்களுடன், 11 வகையான கல்வி உபகரணங்களும் வழங்கப்படும். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு பிரதி மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே, பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிளில் சோ்ப்பதற்கு முன்வர வேண்டும்.

நிகழாண்டில் 9-ஆம் வகுப்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் திராவிட மொழி குடும்பம் என்ற பாடம் சோ்க்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அடுத்த கல்வி ஆண்டில் (2024-25) அவரது முழுமையான வாழ்க்கை வரலாற்றை பாடத் திட்டத்தில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.