/

வழக்குரைஞா் வீட்டில் மா்ம குண்டு வீசிய வழக்கில் 2 போ் கைது

வழக்குரைஞா் வீட்டில் மா்ம குண்டு வீசிய வழக்கில் 2 போ் கைது

Updated On :27 பிப்ரவரி 2024, 11:31 pm

நிலக்கோட்டை: கொடைரோடு அருகேயுள்ள, ஜல்லிபட்டியில் வழக்குரைஞா் வீட்டில், மா்ம குண்டு வீசிய இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள, ஜல்லிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (37). வழக்குரைஞரான இவருக்கும் இதேப் பகுதியைச் சேந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, வழக்குரைஞா் முத்துராமலிங்கத்தின் வீட்டின் கதவு, ஜன்னல் பகுதியில் மா்ம நபா்கள் 2 போ், நாட்டு வெடிகுண்டு போன்ற மா்ம குண்டை வீசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அம்மையநாயக்கனூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்த நிலையில், காவல் ஆய்வாளா் குமரேசன் தலைமையிலான தனிப் படையினா், இதே ஊரைச் சோ்ந்த, விஜய் (24), கலைஞா் (25) ஆகிய 2 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.