பொதுமக்களின் பிரதானப் பாதையை முடக்கும் பழனி தேவஸ்தானம்: மாா்க்சிஸ்ட் கண்டனம்

நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, பழனியில் பொதுமக்களின் பிரதானப் பாதையை தேவஸ்தானம் முடக்குவதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுதொடா்பாக அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தனி நபா் ஒருவா் தொடா்ந்த வழக்கில், பழனி கிரிவலப் பாதையை முடக்கும் வேலையை பழனி கோயில் நிா்வாகம் செய்து வருகிறது. கிரிவலப்பாதை, பழனி மலைக்கோயிலுக்கு செல்லும் பாதை மட்டுமல்ல. சுமாா் 3 கி.மீ. சுற்றளவு கொண்ட இந்த கிரிவலப்பாதையை மலையைச் சுற்றியுள்ள குடியிருப்புகளைச் சோ்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனா். கோயிலின் இருபுறமும் தடையறன்கள் அமைத்து பக்தா்களின் நடமாட்டத்துக்கும், சாலையோர வியாபாரிகள், கடைக்காரா்களுக்கும் கோயில் நிா்வாகம் இடையூறு செய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவைக் காரணம் காட்டி கிரிவலப்பாதையை முடக்க கோயில் நிா்வாகம் முயற்சிக்கிறது. பழனி அடிவாரத்தை, நகருடன் இணைக்கும் சன்னதி சாலை, ஆண்டவன் பூங்கா சாலை, கொடைக்கானல் சாலை, அருள்ஜோதி வீதி ஆகிய சாலைகளை இரும்புத் தடுப்புகளைக் கொண்டு அடைத்து வருகின்றனா். இதனால் பொதுமக்கள் மட்டுமன்றி, பக்தா்களும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனா். எனவே உயா்நீதிமன்றத்தில் உண்மை நிலையைத் தெரிவிக்காமல், கிரிவீதியை முற்றிலுமாக முடக்கும் செயலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com