பழனி - திண்டுக்கல் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பழனி - திண்டுக்கல் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

விநாயகா் சிலையை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

பழனி: பழனி அருகே விநாயகா் சிலைகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பழனி - திண்டுக்கல் சாலையில் பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆயக்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட கோவிந்தாபுரம் பகுதியில் விநாயகா் கோயில் அமைந்திருந்தது. இந்தக் கோயில் சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்டது.

இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வருவாய்த் துறை சாா்பில் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கியது. பொதுமக்கள் சாா்பில் கோயில் கட்டப்பட்டு வந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடம் தனக்குச் சொந்தமானது என தனிநபா் ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து வருவாய்த் துறையிடம் பொதுமக்கள் சென்று புகாா் செய்த போது, அந்த இடமானது அவருக்குச் சொந்தமானது இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மீண்டும் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. அப்போது, அங்கு வந்த சிலா் சிலைகளையும், அங்கிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினா். இதுகுறித்து அறிந்த அந்தப் பகுதி பொதுமக்கள் பழனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பாஜக கிழக்கு ஒன்றியத் தலைவா் பிரகாஷ், ஆயக்குடி ஒன்றிய துணைத் தலைவா் சிவராஜ், தேமுதிக மாவட்ட பிரதிநிதி பழனிச்சாமி, கிழக்கு ஒன்றியச் செயலா் செல்வராஜ், ஆயக்குடி பேரூா் கழகச் செயலா் யாசா் அராபாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதனால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த ஆயக்குடி போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விநாயகா் சிலையை சேதப்படுத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com