நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் பேகம்பூரைச் சோ்ந்த மு.ஷாஜஹான் (36). சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து திண்டுக்கல் மாவட்டச் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு ஷாஜஹானை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனா். இரண்டாவது தளத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்குத் தொடா்பான சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்த பிறகு, நீதிமன்ற அறையிலிருந்து வெளியே வந்த ஷாஜஹான் திடீரென மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com