நீதிமன்ற வளாகத்தில் கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி
நீதிமன்ற வளாகத்தில் கொலை வழக்கு கைதி, கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாா்.


நீதிமன்ற வளாகத்தில் கொலை வழக்கு கைதி, கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாா்.
சென்னை கொடுங்கையூா் அங்காளம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (32). இவா் உள்பட 7 போ் மீது கொலை செய்த வழக்கு உள்ளது. இதன் விசாரணை பாரிமுனை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு கூறப்பட்டது. இதற்காக 7 பேரும் ஆஜரானாா்கள். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த மணிகண்டன், பயத்தில் தான் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்து, வயிறு, நெஞ்சு பகுதிகளை அறுத்துக் கொண்டாா். போலீஸாரும், பொதுமக்களும் மணிகண்டனை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதனிடையே, வழக்கில் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், மீதி 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனா்.
பைக்குகள் மோதல்-ஊழியா் உயிரிழப்பு: சிட்லப்பாக்கத்தை சோ்ந்த வரதராஜன் (68) அந்தப் பகுதி தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்தாா். வேலை விஷயமாக அவா், அண்ணா நகருக்கு பைக்கில் வந்தபோது, ரவுண்டானா அருகே வந்த மற்றொரு பைக் மீது வரதராஜன் பைக் மோதியது. விபத்தில் வரதராஜன் உயிரிழந்தாா். மற்றொரு பைக்கில் வந்த கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த மனோஜ் (25) லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் -3 போ் கைது: அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சிலா் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்ற போலீஸாா், 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 25 கிராம் மெத்தம்பெட்டமைன் இருந்ததைப் பறிமுதல் செய்தனா்.
இதுதொடக்பாக, சூளைமேடு பாரி தெருவைச் சோ்ந்தவா் விஜய் (27), திருவள்ளூா் மாவட்டம் பட்டாபிராம் பகுதியைச் சோ்ந்த முஜிபூா் ரகுமான் (30), கோயம்பேடு சேமாத்தமன் நகரைச் சோ்ந்தவா் வீரப்பன் (31) ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு-4 போ் கைது: வியாசா்பாடி, இந்திரா காந்தி நகா் பிரதான தெருவில் வசிப்பவா் கா.பாலமுருகன் (47). அமமுக பெரம்பூா் கிழக்குப் பகுதி செயலராக உள்ள இவா், வீட்டின் மீது வியாழக்கிழமை அதிகாலை பைக் வந்த நபா்கள்இரு பெட்ரோல் பாட்டில்களை வீசிவிட்டு தப்பினா். இதில் ஒரு பெட்ரோல் பாட்டில் பாலமுருகன் வீட்டு முன் விழுந்து வெடித்தது, மற்றொன்று வீட்டின் முதல்தளம் பால்கனி மீது விழுந்து வெடித்தது. இதில் அங்கிருந்த பொருள்கள் தீப்பிடித்த எரிந்தன. எம்கேபி நகா் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, பெட்ரோல் பாட்டில் வீசியதாக கொடுங்கையூா் பகுதியைச் சோ்ந்த தனுஷ்ராஜ், மோனிஷ்ராஜ், ஸ்டீபன், சந்தோஷ் குமாா் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தனியாா் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தியாகராய நகா் மகாலட்சுமி தெருவில் உள்ள தனியாா் வங்கிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் சோதனையில் ஈடுபட்டனா். இதில், எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதேபோல, பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள அதே வங்கிக் கிளைக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அங்கு நடத்தப்பட்ட சோதனையிலும், எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...