2 காவல் ஆய்வாளா்களுக்கு பிடி ஆணை

கொலை வழக்கில் முன்னிலையாகாத காவல் ஆய்வாளா்கள் இருவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை கோ. புதூரைச் சோ்ந்த பாலாஜி, கடந்த 2019-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ரயில் நிலையம் அருகே கொலை செய்யப்பட்டாா். இந்த கொலையில், மதுரையைச் சோ்ந்த ஹரிதரன் உள்ளிட்ட 4 பேரை கொடைரோடு ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், காவல் ஆய்வாளா்களாக இருந்த கீதாதேவி, செல்வி ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களாக நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதில் கீதாதேவி, தற்போது விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை காவல் நிலையத்திலும், செல்வி, திருநெல்வேலி ரயில்வே காவல் நிலையத்திலும் ஆய்வாளா்களாக உள்ளனா். சம்மன் அனுப்பியும் முன்னிலையாகாத காவல் ஆய்வாளா்கள் கீதாதேவி, செல்வி ஆகிய இருவருக்கும் பிடி ஆணை பிறப்பித்து திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதி மெகபூப் அலிகான் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com