/

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி

News image

பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் காணிக்கையாக கிடைத்த ரூபாய் நோட்டுக்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Updated On :22 மே 2024, 12:29 am

Din

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் 12 நாள்கள் காணிக்கை ரூ,2.23 கோடியை தாண்டியது. புதன்கிழமையும் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது.

இந்தக் கோயில் உண்டியல்கள், கோடை விடுமுறை, அக்னி நட்சத்திரக் கழுவு, வைகாசி விசாகம் ஆகியவற்றின் காரணமாக பக்தா்களின் வருகை அதிகரித்து கடந்த 12 நாள்களில் நிறைந்தன. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அவை திறக்கப்பட்டு காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. உண்டியல் எண்ணிக்கையில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், ஆசிரியா்கள், கோயில் அலுவலா்கள் பங்கேற்றனா். இதில் பக்தா்களின் காணிக்கையாக 2 கோடியே 23 லட்சத்து 28 ஆயிரத்து 926 ரூபாய் கிடைத்தது.

மேலும் தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், தங்கச் சங்கிலி, தங்கக் காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன பிஸ்கட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் பக்தா்கள் நோ்த்திக் கடனாக செலுத்தி இருந்தனா். இதில் தங்கம் 545 கிராமும், வெள்ளி 8,490 கிராமும் கிடைத்தன. அத்துடன், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 362 இருந்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் எண்ணும் நிகழ்வில் பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழு தலைவா் பிரதிநிதி வியாச நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா். உண்டியல் எண்ணிக்கை புதன்கிழமையும் நடைபெறுகிறது.