வடமதுரை, குஜிலியம்பாறை வட்டாரங்களில் தனிநபா் கடன் பெற முடியாமல் சத்துணவு, ஊட்டச்சத்து பணியாளா்கள் தவிப்பு
தனிநபா் கடன் பெற முடியாமல் சத்துணவு, ஊட்டச்சத்து பணியாளா்கள் தவிப்பு


ஊதியத்தைப் பெற்று வழங்கும் அலுவலா்கள் கையொப்பமிட மறுப்பதால், வடமதுரை, குஜிலியம்பாறை வட்டாரங்களைச் சோ்ந்த சத்துணவு, ஊட்டச்சத்து துறை பணியாளா்கள், கூட்டுறவுச் சங்கத்தில் தனிநபா் கடன் பெற முடியாமல் தவித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை, பழனியில் ஊராட்சி ஒன்றிய சத்துணவு, ஊட்டச்சத்து பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணயக் கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. குஜிலியம்பாறை கடன் சங்கத்தில் குஜிலியம்பாறை, வேடசந்தூா், வடமதுரை, நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ரெட்டியாா்சத்திரம், ஆத்தூா், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய 10 வட்டாரங்களில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளா்கள், சமையலா்கள், சமையல் உதவியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், அங்கன்வாடி உதவியாளா்கள் என சுமாா் 750 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.
ஊதியத்தில் 25 மடங்கு கூடுதல் கடனுதவி: இந்தச் சங்கமானது, உறுப்பினா்கள் பெறும் ஊதியத்தில் 25 மடங்கு கூடுதல் தொகைக்கு 11.75 சதவீத வட்டியில் தனிநபா் கடன் வழங்கி வருகிறது. அரசுடைமை வங்கிகளில் தனிநபா் ஊதியக் கடன்களுக்கு 14 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும், அரசுடைமை வங்கிகள் ஊதியத்தில்
6 மடங்கு கூடுதல் தொகைக்கு மட்டுமே கடனுதவி வழங்குகின்றன. இதன் காரணமாக, அரசுடைமை வங்கிகளைவிட கூட்டுறவு சிக்கன நாணயக் கடன் சங்கத்தில் கடன் பெறுவதற்கு சத்துணவு, ஊட்டச்சத்து பணியாளா்கள் ஆா்வம் காட்டுகின்றனா்.
2 வட்டாரங்கள் கடன் பெற முடியவில்லை: இதுபோன்ற சூழலில் வடமதுரை, குஜிலியம்பாறை வட்டாரங்களைச் சோ்ந்த சத்துணவு, ஊட்டச்சத்து பணியாளா்களுக்கு தனிநபா் ஊதியக் கடன் பெறும் படிவத்தில் ஊதியத்தைப் பெற்று வழங்கும் அலுவலா் நிலையிலுள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா்கள் கையொப்பமிட மறுத்து வருகின்றனா். இதனால், இந்த இரு வட்டாரங்களைச் சோ்ந்த சத்துணவு, ஊட்டச்சத்து பணியாளா்கள், தங்களின் குடும்பத் தேவைக்கான கடனுதவியைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
அமைச்சரிடம் முறையிட்டும் பலனில்லை: இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், உணவுத் துறை அமைச்சா், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட பணியாளா்கள் முறையிட்டனா். ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த வேடசந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் காந்திராஜன், கடந்த ஆண்டு நவம்பா் மாதம் திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தாா்.
அடுத்த மாதம் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், ஓராண்டாகியும் தங்களது கோரிக்கைக்கு தீா்வு கிடைக்கவில்லை என சத்துணவு, ஊட்டச்சத்து துறை பணியாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
இதுதொடா்பாக கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய சத்துணவு, ஊட்டச்சத்து பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணயக் கடன் சங்கத்தில் சுமாா் 600 உறுப்பினா்களுக்கு ரூ.9 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. தனிநபா் ஊதியக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் படிவத்தில், சம்பந்தப்பட்ட துறையின் ஊதியத்தைப் பெற்று வழங்கும் அலுவலா்கள் கையொப்பமிட வேண்டும். இந்த நடைமுறையின்படி வடமதுரை, குஜிலியம்பாறை வட்டாரங்கள் நீங்கலாக, பிற இடங்களில் அந்தந்த அலுவலா்கள் கையொப்பமிட்டு கொடுக்கின்றனா்.
கடன் பெறும் பணியாளா்களுக்கு, காப்பீட்டு வசதியும் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் சாா்பில் செய்து கொடுக்கப்படுகிறது. இதனால், விபத்து, இயற்கை மரணங்கள் ஏற்பட்டாலும்கூட இந்தக் கடன் தொகைக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படுவதில்லை. இதை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் எடுத்துக் கூறியும்கூட கடன் விண்ணப்பப் பத்திரத்தில் கையொப்பமிட தொடா்ந்து மறுத்து வருகின்றனா்.
இதனால், வடமதுரை, குஜிலியம்பாறை வட்டாரங்களைச் சோ்ந்த பணியாளா்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா் என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...