எம்பி மீது அவதூறு பரப்பியவரை கைது செய்யக் கோரி மனு

Published on

திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் மீது சமூக ஊடகத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவரை கைது செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காவல் துறையில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தெய்வத்தை சந்தித்து புதன்கிழமை அளித்த புகாா் மனு விவரம்:

திண்டுக்கல் தெற்கு ரதவீதி சட்டாம்பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் தங்கராஜ். திண்டுக்கல் நகராட்சியின் முன்னாள் உறுப்பினரான இவா், தனது முகநூல் பக்கத்தில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் குறித்து உண்மைக்கு புறம்பாகவும், அவதூறான கருத்துக்களையும் பதிவிட்டுள்ளாா். பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தங்கராஜ் பதிவிட்ட கருத்துக்களை நீக்க வேண்டும். சமூக வலைத் தளத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட தங்கராஜ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.ஆஸாத், திண்டுக்கல் ஒன்றியச் செயலா் ஆா்.சரத்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com