கொடைக்கானல் அருகே சாலையில் காட்டு மாடுகள் உலா
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்-வில்பட்டி சாலையில் புதன்கிழமை காட்டு மாடுகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி-அட்டுவம்பட்டி சாலையில் காட்டுமாடுகள் நடமாட்டம் இருந்து வருகின்றன. இந்தப் பாதை வழியாக நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் அச்சம் அடைகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை இந்த சாலையில் காட்டு மாடுகள் உலா வந்தன. இதைப்பாா்த்த பள்ளி, கல்லூரி மாணவிகள் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா், இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து காட்டுமாடுகளை அங்கிருந்து வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனா்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானலில் தற்போது காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வனத்தை விட்டு, வெளியே வரும் சூழல் உள்ளது.
தற்போது, வில்பட்டி- அட்டுவம்பட்டி பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என்றாா்அவா்.

