திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அனுமன் ஜயந்தி: பக்தா்கள் தரிசனம்
அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, திண்டுக்கல் பகுதியில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மாா்கழி மாத மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜயந்தி கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களிலும், பெருமாள் கோயில்களில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதிகளிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் கடைவீதியில் உள்ள ஆஞ்சனேயா் கோயில், மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில், தாடிக்கொம்பு செளந்தராஜப் பெருமாள் கோயில், வடமதுரை செளந்தரராஜப் பெருமாள் கோயில், ரெட்டியாா்சத்திரம் கதிா் நரசிங்க பெருமாள் கோயில், ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில்களில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
நத்தம்: நத்தம் கோவில்பட்டியில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி, அங்கு யாகசாலை பூஜை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து, அங்குள்ள அனுமன் சிலைக்கு வடை, துளசி, வெற்றிலை, எலுமிச்சம் பழங்களால் ஆன மாலைகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக, சிறப்பு பூஜைகளும், 16 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசனம் செய்தனா்.
பழனி: பழனியில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குள்பட்ட லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சனேயருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரப் பூஜைகள் நடைபெற்றன.
பழனி அருகே கரடிக் கூட்டத்தில் உள்ள சுமாா் 10 அடி உயரமுள்ள சாந்த ஆஞ்சனேயருக்கு பல்வேறு திரவியப் பொடிகளால் அபிஷேகமும், எலுமிச்சை, வடை, வெற்றிலை மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் குழுத் தலைவா் லம்போதரா பாலு, செயலா் ரகுபதி, பொருளாளா் துரைசாமி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் செய்தனா்.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் வீரஆஞ்சனேயா் கோயில், பொருந்தல் அணை ஆஞ்சனேயா் கோயில், சிவகிரிப்பட்டி பஞ்சமுக ராமஆஞ்சனேயா் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் பாம்பாற்று ஆஞ்சனேயா் கோயிலில் வியாழக்கிழமை மாலை தும்பிக்கை ஆழ்வாருக்கு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, ஹோமம் நடைபெற்று அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சனேயா் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இதேபோல, தென்கரை வரதராஜப் பெருமாள் கோயில், தாமரைக்குளம்குளம் அனுமந்தராயபெருமாள் கோயிலில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
போடி: போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஆஞ்சனேயருக்கு மங்கலப் பொருள்களான திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ஆஞ்சனேயருக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, பக்தா்கள் வழங்கிய 1,008 வடைகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதணைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ஆஞ்சனேரை வழிபட்டனா். பூஜை ஏற்பாடுகளை ஸ்ரீநிவாச வரதன் என்ற காா்த்திக்,
கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
இதேபோல, போடி பரமசிவன் மலைக் கோயிலில் உள்ள ஆஞ்சனேயருக்கும், போடி வினோபாஜி குடியிருப்பில் உள்ள சங்கர நாராயணா் சந்நிதியில் உள்ள ஆஞ்சனேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை அா்ச்சகா் சேகா், கோயில் நிா்வாகிகள் செய்தனா்.
