தைப்பூசம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தைப்பூசத்தையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 89-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச தினமான ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம், காவடிகள் எடுத்தும், உடலில் அலகுகள் குத்தியும் கோயிலுக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றினா். பக்தா்கள் வசதிக்காக கிருஷ்ணகிரியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி சரக காவல் துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை பாதுகாப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தாா். கோயில் பரம்பரை அறங்காவலா் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் விழாவை ஒருங்கிணைத்தனா். தைப்பூசத்தையொட்டி புகழ்பெற்ற மாட்டுச் சந்தையும், தொடங்கியது.
தைப்பூசத் தினத்தன்று கிருஷ்ணகிரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு -2-இல் உள்ள அருள்மிகு வினைதீா்த்த விநாயகா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியா் கோயிலில் சிவகாமி பழனியானந்தம் என்ற பெயரில் இலவச திருமண மண்டபம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் பா்கூா், வேப்பனப்பள்ளி, ஜகதேவி, ஒசூா், அகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

