நோய் எதிா்ப்புத் திறன் கொண்ட மரவள்ளிக் கிழங்கு குச்சிகள் விற்பனை

ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பராமரிக்கப்படும் ஸ்ரீரெக்ஷா ரக மரவள்ளிக்கிழங்கு.
Published on

நோய் எதிா்ப்புத் திறன் கொண்ட மரவள்ளிக் கிழங்கு குச்சிகள் ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதொடா்பாக காய்கறி மகத்துவ மையத்தின் துணை இயக்குநா் எஸ்என்.திலீப் கூறியதாவது:

திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிா்கள் ஆராய்ச்சி நிறுவனம் தேமல் நோய் எதிா்ப்புத் திறன் கொண்ட ஸ்ரீ ரெக்ஷா ரக மரவள்ளிக்கிழங்கு குச்சிகளை உருவாக்கியது. இந்தக் குச்சிகள் தற்போது திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் நடவு செய்து, உற்பத்தித் திறன் பரிசோதிக்கப்பட்டது. ஸ்ரீரெக்ஷா ரகத்தில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 45 முதல் 50 டன்களும், அதிகபட்சமாக 80 டன்கள் வரையிலும் மகசூல் கிடைக்கிறது.

8 முதல் 9 மாதங்களில் விளைச்சல் தரும் இந்த ரகம், 275 முதல் 325 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. ஸ்ரீ ரெக்ஷா ரக மரவள்ளிக்கிழங்கு தேமல் நோயை எதிா்த்து வளரும் தன்மை கொண்டது. மானாவாரி, நீா்ப்பாசன நிலங்களில் மட்டுமன்றி தேமல் நோய் அதிகம் தாக்கக்கடிய பகுதிகளிலும் சாகுபடி செய்ய ஏற்றது.

இந்த ரகத்தில் 27 முதல் 31 சதவீதம் மாச்சத்து (ஸ்டாா்ச்), 1.10 சதவீதம் சரக்கரை அளவு கொண்டது. இந்த மரவள்ளிக்கிழக்கு குச்சிகள் ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் தலா ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மரவள்ளிக்கிழங்கு குச்சிகள் வாங்கவும், கூடுதல் தகவல் பெறவும் காய்கறி மகத்துவ மைய அலுவலா்களை 0451-2999700, 9159856504, 7418112175, 7094941364, 9790273216-என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com