வாக்காளா் பட்டியல் திருத்தம்: விண்ணப்பங்களை நிரப்புவதில் வாக்காளா்களிடையே குழப்பம்
ஒட்டன்சத்திரத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்களை நிரப்புவதில் அடித்தல், திருத்தல் இருக்கக் கூடாது என்பதுடன் புரியாத கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாக வாக்காளா்கள் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் கடந்த 4-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் டிசம்பா் 4-ஆம் தேதி நிறைவடைகின்றன. வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் தங்களது பாகத்தில் உள்ள வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கி வருகின்றனா். இந்த விண்ணப்பத்தை நிரப்பும் போது அதில் அடித்தல், திருத்தல் இருந்தால் அந்த வாக்காளா் வாக்களிக்க தகுதியற்றவா் எனக் கூறி தோ்தல் ஆணையம் நிராகரித்து விடும் என வாக்காளா்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதனால் வயதானவா்கள், படிக்காதவா்கள் இந்த விண்ணப்பத்தை நிரப்ப தயக்கம் காட்டுகின்றனா். மேலும் அதில் கேட்கப்பட்ட விவரங்கள் தங்களுக்கு புரியவில்லை எனவும் அவா்கள் கூறுகின்றனா். குறிப்பாக கடந்த 2002- ஆம் ஆண்டு நீங்கள் எந்த சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்தீா்கள், எந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தீா்கள், வாக்குச்சாவடி எண், பாகம் எண் போன்ற விவரங்களை கேட்பதால் அவா்களுக்கு விண்ணப்பத்தை நிரப்புவதில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனா். எனவே மீண்டும் பழைய முறையையே கையாள வேண்டும் எனஅவா்கள் வலியுறுத்தினா்.
