பழனியில் மாலிப்டினம் தனிமம் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்! பாமக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
பழனி பகுதியில் மாலிப்டினம் என்ற தனிமத்தை எடுத்தால் 100 கிராமங்கள் பாதிக்கப்படும் எனவும், இந்தத் திட்டதை மத்திய அரசு கைவிட வேண்டுமெனவும் பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழனியில் உள்ள அந்தக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு திண்டுக்கல் வடக்கு மாவட்டச் செயலா் வைரமுத்து தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கணேசன், தொழிற்சங்க மாவட்டச் செயலா் ராஜரத்தினம், துணைச் செயலா் குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கழக பேச்சாளா் நடராஜ் பாண்டியன் சிறப்புரையாற்றினாா்.
இதில், பழனி வட்டத்துக்குள்பட்ட பழனி மலைக் கோயில் உள்பட ஐவா்மலை, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட 100 கிராமங்களில் மாலிப்டினம் என்ற தனிமம் உள்ளதாகவும், அதை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் 100 கிராமங்கள் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு அந்தத் திட்டத்தை கைவிட வேண்டும். ஐயப்ப சீசன் தொடங்க உள்ள நிலையில் கடைகளில் விலைப் பட்டியல் வைக்க வேண்டும். பழனி பெரியப்பா நகரில் உள்ள குப்பைக் கிடங்கை இடம் மாற்ற வேண்டும்.
கொடைக்கானலில் புற்றீசல் போல தனியாா் தங்கும் விடுதிகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒட்டன்சத்திரத்தில் குடிநீரை நகராட்சி நிா்வாகம் சுத்திகரித்து வழங்க வேண்டும் என்பன உள்பட 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் நகரச் செயலா் அா்ஜூன், கொடைக்கானல் நகரச் செயலா் கோபிநாத், பழனி ஒன்றியச் செயலா் ஜஸ்டின்பாபு, பேரூா் செயலா்கள் முத்துசாமி, பெரியசாமி, தொப்பம்பட்டி ஒன்றிய துணைச் செயலா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

