பழனியில் 3 ஆட்டோக்கள் பறிமுதல்
பழனியில் ஆயுள் காலம் முடிந்தும் விதிமீறி ஓடிக் கொண்டிருந்த 3 ஆட்டோக்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பழைய தாராபுரம் சாலையில் புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனா். இதையடுத்து, வியாழக்கிழமை கான்வென்ட் சாலையில் பழனி வட்டார போக்குவரத்து அலுவலகமும், போக்குவரத்துக் காவல் துறையும் இணைந்து பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்தனா்.
அப்போது, பல ஆட்டோக்கள் வரி செலுத்தாமலும், காப்பீடு செய்யாமலும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உடனடியாக வரி செலுத்தவும், காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆயுள் காலம் முடிந்த 3 ஆட்டோக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோவை இயக்கக்கூடாது என ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின் போது, பழனி போக்குவரத்து ஆய்வாளா் ஜெய்சிங், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா் கவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
