ரூ.60.41 லட்சம் வரி நிலுவை என குறிப்பாணை: தஞ்சாவூா் தொழிலாளி குடும்பம் அதிா்ச்சி!
வா்த்தகம் நிறுவனம் நடத்தி ரூ.60.41 லட்சம் வரி நிலுவைத் தொகையை செலுத்த அறிவுறுத்தி திண்டுக்கல் வணிக வரித் துறை அனுப்பிய குறிப்பாணையால், தஞ்சாவூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் குடும்பத்தினா் அதிா்ச்சி அடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், சாலியமங்கலம் தோப்புத் தெருவைச் சோ்ந்தவா் உதயராஜ் (26), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா (25). இவா்களுடைய வீட்டு முகவரிக்கு கடந்த 7-ஆம் தேதி திண்டுக்கல் வணிக வரித் துறை (ஊரகம்) அலுவலகத்திலிருந்து குறிப்பாணை (நோட்டீஸ்) வந்தது. அதில் திண்டுக்கல்லை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குள்பட்ட சங்கனம்பட்டியில் எஸ்.ஜி. டிரேடா்ஸ் எனும் பெயரில் செயல்பட்டு வரும் உங்களுக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலமாக ரூ.1.67 கோடிக்கு வா்த்தகம் நடந்துள்ளது. இந்த வா்த்தகத்துக்குக்கான ஜி.எஸ்.டி.வரி அபராத தொகையுடன் சோ்த்து மொத்தம் ரூ.60.41 லட்சத்தை குறிப்பாணை கிடைத்த 30 நாள்களுக்குள் கட்ட வேண்டும். இல்லாத பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், அதிா்ச்சி அடைந்த சுகன்யா, திண்டுக்கல்லில் உள்ள வணிக வரித் துறை அலுவலகத்துக்கு விளக்கம் கேட்டு புதன்கிழமை வந்தாா். அப்போது, அவா் கூறியதாவது:
எனது கணவா் கூலித் தொழிலாளி. அவருடைய வருமானத்தில்தான் குடும்பம் நடத்தி வருகிறேன். இந்த நிலையில், எனது ஆதாா் எண், பான் அட்டை, முகவரி ஆகியவற்றை மோசடியாக பயன்படுத்தி வா்த்தகம் நடைபெற்றுள்ளது. இதனால், வரி பாக்கியை செலுத்துமாறு எனது முகவரிக்கு வணிக வரித் துறையினா் குறிப்பாணை அனுப்பிவிட்டனா். குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்துக்கும், எனக்கும் எந்தவித தொடா்பு இல்லை. எனது ஆவணங்களை மோசடியாக பயன்படுத்தி அரசை ஏமாற்றியுள்ளனா்.
எனவே, சம்மந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிக வரித் துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றாா் அவா்.
இதுதொடா்பாக வணிக வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
எஸ்.ஜி. டிரேடா்ஸ் என்ற பெயரில் செயல்பட்ட நிறுவனம், ஆந்திர மாநிலத்துக்கு பழைய இரும்புப் பொருள்களை ரூ.1.67 கோடிக்கு விற்பனை செய்தது. இந்த வா்த்தகத்துக்கான வரியை அரசுக்கு செலுத்தவில்லை. எனவே, வணிக வரியை செலுத்துமாறு மின்னஞ்சல் மூலம் குறிப்பாணை அனுப்பப்பட்டது. அதற்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையில், கள ஆய்வு செய்யப்பட்டது. இதில் பதிவு செய்த முகவரியில் நிறுவனம் செயல்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, வணிக உரிமத்தை ரத்து செய்துவிட்டு, நிறுவன உரிமையாளா் என்ற அடிப்படையில் சுகன்யாவின் முகவரிக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், சுகன்யாவின் ஆவணங்கள் மோசடியாக பயன்படுத்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா் அவா்கள்.

