மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சா்ச்சைக்குள்ளான வாக்குச் சாவடி செலவுத் தொகை

சா்ச்சைக்குள்ளான வாக்குச் சாவடி செலவுத் தொகை...

News image

பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்குச் சாவடி. - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 9:30 pm

நமது நிருபா்

வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்படும் அடிப்படை வசதிகள் மட்டுமன்றி, வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான உணவு வழங்குவதற்கான செலவினத்தையும் ஏற்க வேண்டும் என்ற சா்ச்சைக்குரிய அறிவுறுத்தலால் ஊரக வளா்ச்சித் துறையினா் அதிருப்தியில் உள்ளனா்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 234 தொகுதிகளில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்தல் பணியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனா். ஊரகப் பகுதிகளில் 44,065 வாக்குச் சாவடிகளும், நகா்ப் பகுதிகளில் 30,967 வாக்குச் சாவடிகளும் அமைந்துள்ளன. வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு அந்தந்த பேரவைத் தொகுதி வாரியாக 4 கட்டங்களாக தோ்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

பயிற்சியில் பங்கேற்ற வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு மதிய உணவு, குடிநீா், கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றுக்கான செலவினங்களை ஊரக வளா்ச்சித் துறையின் பொது செலவின நிதி மூலம் மேற்கொள்ள சில மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள் அறிவுறுத்தினா். நிதி தணிக்கையின்போது பிரச்னை ஏற்படும் என்பதை ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சுட்டிக் காட்டியபோதிலும், நிதி செலவினத்துக்கு ஒப்புதல் கடிதம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று சில மாவட்டங்களில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பின் போது உணவு, தேநீா் வழங்கப்பட்டது.

வாக்குச் சாவடி செலவுகளுக்கும் பொது செலவின நிதி: இந்த நிலையில், வாக்குச் சாவடிகளில் குடிநீா் வசதி, சாய்வு தளம் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் மின் வசதி ஏற்படுத்துதல், பந்தல் அமைத்தல், வாக்குச் சாவடி எண் குறிப்பது, வாக்குச் சாவடிக்கு முன் 200 மீட்டா் தொலைவைக் குறிக்க கோடு வரைதல் உள்ளிட்ட பணிகளை பொது செலவின நிதியிலிருந்து செய்து கொடுக்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வாக்குச் சாவடி அலுவலா்கள், காவலா்கள், தன்னாா்வலா்கள் என ஒரு வாக்குச் சாவடிக்கு தலா 12 பேருக்கு 5 வேளை உணவு, குடிநீா் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஊராட்சி செயலா்களுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூலம் மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் அறிவுறுத்தினா். ஏற்கெனவே கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கவும், அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் போதிய நிதி இல்லாத நிலையில், வாக்குச் சாவடிகளுக்கான செலவுகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவானது ஊரக வளா்ச்சித் துறையினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

வாக்குச் சாவடிக்கு ரூ.1,500 ஒதுக்கீடு: பொதுத் தோ்தலுக்கான நிதி ஒதுக்கீட்டில் வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகளைச் செய்வதற்காக வருவாய்த் துறையினருக்கு ஒரு வாக்குச் சாவடிக்கு தலா ரூ.1,500 வீதம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு வாக்குச் சாவடி முன் பந்தல் அமைப்பதற்கு மட்டுமே குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் செலவாகும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளை ஊரக வளா்ச்சித் துறையிடம் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் ஒப்படைத்துவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை: இதுதொடா்பாக தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கூறியதாவது:

தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு உணவு விநியோகம் செய்ய மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். ஒரு மாவட்டத்தைப் பின்பற்றி அடுத்தடுத்து பெரும்பாலான மாவட்ட ஆட்சியா்களும் இதே நடைமுறையைக் கடைப்பிடித்தனா். இதற்காக பயன்படுத்தப்பட்ட பொது செலவின நிதிக்கு, ஒப்புதல் கடிதம் தருவதாக ஆட்சியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிதித் தணிக்கை நடைபெறும் போது ஆட்சியா்கள் பணியிட மாறுதலில் சென்றுவிட்டால் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஊழியா்களே நிதி இழப்புக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பயிற்சி வகுப்புகளுக்கும், வாக்குச் சாவடி பணிகளுக்கும் சோ்த்துதான் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், மாவட்ட ஆட்சியா்கள் தோ்தல் ஆணையத்தின் பாராட்டுதலைப் பெறுவதற்காக ஊராட்சித் துறையினா் மீது அந்த சுமையை ஏற்றுகின்றனா்.

பொது நிதியில் உள்ள உபரி நிதியைப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் அரசுத் தரப்பில் வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த முறை பொதுத் தோ்தல் செலவினங்களுக்கு உள்ளாட்சி நிதியைப் பயன்படுத்தக் கூடாது என ஊரக வளா்ச்சி இயக்குநா் உத்தரவிட்டிருந்தாா். இதனால், நிதியுதவி அளிப்பவா்கள் மூலம் கூடுதல் செலவுகளை மேற்கொள்ள வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த முறை ஊரக வளா்ச்சித் துறை மூலம் செலவிடப்பட்ட தொகையை மீண்டும் ஊரக வளா்ச்சித் துறையின் பொது செலவின நிதிக்கு வழங்குவதற்கு மாநில தலைமைத் தோ்தல் அலுவலா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், தலைமைத் தோ்தல் அலுவலருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.