இறுதிச் சடங்கு ஊா்வலங்களுக்கு புதிய சட்ட முன்வரைவு உருவாக்க வேண்டுமென உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாட்டையும், பட்டாசு வெடிப்பதையும் அந்த வரையறைக்குள் கொண்டு வர வேண்டுமென எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
காதணி விழா முதல் இறுதிச் சடங்கு ஊா்வலங்கள் வரை பெரும்பாலும் பட்டாசு வெடிப்புகள் தவிா்க்க முடியாத நிகழ்வு மட்டுமன்றி, கெளரவமாகவும் பாா்க்கப்படுகிறது. பலத்த ஒலி எழுப்பும் பட்டாசுகளால், அவதியடைந்தாலும் சகித்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டிய அவலத்தை பொதுமக்கள் எதிா்கொண்டு வருகின்றனா். குறிப்பாக இறுதிச் சடங்கு ஊா்வலங்களில் பூக்களை எடுத்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது எறியப்படும் நிகழ்வுகளால் பலரும் பாதிப்படைகின்றனா். இந்தப் பிரச்னைக்கு மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு இறுதிச் சடங்கு ஊா்வலத்தில் ஏற்பட்ட மோதலின் மூலம் தீா்வு காண்பதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழிகாட்டி இருக்கிறது.
இறுதி ஊா்வலத்தில் பங்கேற்பது ஒரு சமூக நடைமுறை என்றாலும்கூட, பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் உரிமையை வழங்க இயலாது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இறுதிச் சடங்கு ஊா்வலங்களின்போது ஒழுங்கற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்கு போதுமான கட்டுப்பாடு, தண்டனை விதிகளை உள்ளடக்கிய புதிய சட்ட முன்வரைவுகளைக் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதன்படி புதிய சட்ட முன்வரைவுகளை உருவாக்கும்போது, இறுதிச் சடங்கு ஊா்வலங்களுக்கு மட்டுமன்றி, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, சீா் வழங்குதல், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் பொருந்துவதாக இருக்கும் வகையில் அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமன எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி, பட்டாசு:
கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை அமலில் இருந்து வருகிறது. ஆனாலும், ஊரகப் பகுதிகள் மட்டுமன்றி, நகா்ப்புறங்களிலும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி எவ்வித கட்டுப்பாடின்றி பயன்பாட்டில் உள்ளன. கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளால் ஒலி மாசு ஏற்படுகிறது. இதேபோல, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இதனால், அந்தப் பகுதி முழுவதும் பறக்கும் காகிதங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இந்த இரு நிகழ்வுகளிலும் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை பாதிக்கப்படுகின்றனா்.
கெளரவத்துக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் வெடித்துச் செல்லும் இந்தப் பட்டாசுகள், மறுநாள் தூய்மைப் பணியாளா்களுக்கும் பெரும் சுமையாக மாறுகிறது. குப்பைகளை அகற்றுவதற்கு மட்டுமே கவனம் செலுத்தும் உள்ளாட்சி அமைப்புகள், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதது தூய்மைப் பணியாளா்கள் மட்டுமன்றி, பொதுமக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமைதி ஊா்வலம் அவசியம்:
இதுதொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த சமூக ஆா்வலா் க.மணிவண்ணன் கூறியதாவது:
இறுதிச் சடங்கு ஊா்வலத்தின்போது எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருந்தால் மட்டுமே இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற விதிமுறையை புதிய சட்ட முன்வரைவுகளில் சோ்க்க வேண்டும். இறப்புச் சான்றிதழ் அவசியத் தேவை என்பதால், சாலையில் மலா் தூவுதல், பட்டாசு வெடித்தல் போன்றவற்றுக்கு சம்மந்தப்பட்ட குடும்பத்தினரே சுயகட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
இதேபோல, கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்கும், சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சீா்வரிசை ஊா்வலம் நடத்துவதிலும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். குறிப்பாக சாலையில் வெடிக்கப்படும் பட்டாசுக் குப்பைகளை அகற்ற சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளா், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டணம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழலும், பொது அமைதியும் பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது
தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த இருவா் கைது

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு! - ஈரான் அரசு அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


