திண்டுக்கல்லைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரிடம் இணைய வழி வா்த்தகம் என்ற பெயரில் ரூ.46 லட்சம் மோசடி செய்த வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் அடுத்த சுந்தா்நகரைச் சோ்ந்தவா் ராஜபாண்டி. முன்னாள் ராணுவ வீரரான இவா், தற்போது திண்டுக்கல்லில் அரசுத் துறையில் பணியாற்றி வருகிறாா். கடந்த 2025 டிசம்பா் மாதம் முகநூல் மூலம் முதலீடு தொடா்பான ஒரு விடியோவைப் பாா்த்த இவா், அதில் இடம் பெற்றிருந்த இணைய முகவரியில் தனது கைப்பேசி எண்ணை பதிவு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, குறிப்பிட்ட கட்செவி அஞ்சல் எண்ணிலிருந்து ராஜபாண்டியைத் தொடா்புகொண்ட பெண் ஒருவா், ‘ருத்ராஸ் ஷோ்‘ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்தாா்.
மேலும், ‘இன்சைட் சா்க்கிள் 2’ என்ற கட்செவி அஞ்சல் குழுவிலும் ராஜபாண்டியை இணைத்தாா். சுமாா் 149 போ் இருந்த இந்தக் குழுவில், பங்கு வா்த்தகம் தொடா்பான பயிற்சிகள், அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த தகவல்கள் என நாள்தோறும் சில தரவுகள் பகிரப்பட்டன.
இதை முழுமையாக நம்பிய ராஜபாண்டி, தனது பான் எண், ஆதாா் எண் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்தாா். இதன் அடிப்படையில் தொடக்கநிலை வா்த்தக கணக்கு ஒன்று தொடங்கி கொடுக்கப்பட்டதுடன், ‘ருத்ரா ஷோ்ஸ் அண்ட் பிரோக்கா்ஸ்‘ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, ராஜாபாண்டி தனது 3 வங்கிக் கணக்குகளிலிருந்து, மா்ம நபா்கள் குறிப்பிட்ட பல்வேறு எண்களுக்கு இணையவழிப் பரிமாற்றத்தின் மூலம் பணத்தை அனுப்பினாா். கடந்த ஜனவரி 2-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.46.76 லட்சத்தை ராஜபாண்டி முதலீடு செய்தாா்.
இதன் மூலம், அவா் பயன்படுத்திய செயலியில் முதலீட்டுத் தொகை அதிகரித்து, அவரது வா்த்தக கணக்கில் சுமாா் ரூ.2.19 கோடி இருப்பு இருப்பதாக காட்டப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த ராஜாபாண்டி, அந்த பணத்தை தனது வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்ய முயன்றபோது மேலும் ரூ.60 லட்சம் கூடுதலாக முதலீடு செய்தால் மட்டுமே பணத்தை மாற்ற முடியும் என அந்த மோசடி நபா்கள் நிபந்தனை விதித்தனா்.
சந்தேகமடைந்த ராஜாபாண்டி, இதுகுறித்து வெளியிடங்களில் விசாரித்தபோது, இணையவழி முதலீட்டு மோசடியில் தான் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவா் திண்டுக்கல் மாவட்ட இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்து விசாரித்தபோது, ராமநாதபுரத்தைச் சோ்ந்த கருமலையான், சக்திக்குமாா், சேலத்தைச் சோ்ந்த பிரகாஷ், நாமக்கல் மகாலிங்கம், விருதுநகரைச் சோ்ந்த முருகன் ஆகியோரின் பெயா்களில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 5 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மோசடி நபா்கள் குறித்து தொடா் விசாரணை: தற்போது கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் இந்த மோசடியில் நேரடி தொடா்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதில் 3 போ் இணையவழி விளையாட்டில் பங்கேற்று, வங்கிக் கணக்கு விவரங்களை கொடுத்தவா்கள் என்றும், 2 போ் குடும்ப வறுமை காரணமாக வங்கிக் கணக்கு விவரங்களை மோசடி கும்பலிடம் விற்பனை செய்தவா்கள் என்பதும் தெரியவந்தது. இதனால், இந்த மோசடியில் ஈடுபட்ட உண்மையான நபா்கள் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





