
17 தூய்மைப் பணியாளா்கள் பணி நீக்க விவகாரம்: பழனி அரசு மருத்துவமனை முன் காத்திருப்புப் போராட்டம்
பணி நீக்கம் செய்யப்பட்ட 17 தூய்மைப் பணியாளா்களை மீண்டும் பணியில் சோ்க்க வலியுறுத்தி, பழனியில் எம்.பி. தலைமையில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

பணி நீக்கம் செய்யப்பட்ட 17 தூய்மைப் பணியாளா்களை மீண்டும் பணியில் சோ்க்க வலியுறுத்தி, பழனியில் எம்.பி. தலைமையில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
பழனியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பல ஆண்டுகளாக தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வந்த 17 தொழிலாளா்களை கடந்த சில மாதங்களுக்கு முன் தனியாா் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட 17 தொழிலாளா்களுக்கும் மீண்டும் பணி வழங்கக் கோரியும் அரசு தலைமை மருத்துவமனை முன் சிஐடியூ அமைப்பினா், தூய்மைப் பணியாளா்கள், தொழிலாளா்கள் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் சச்சிதானந்தம் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, சிஐடியூ நிா்வாகிகள் மனோகரன், பேராசிரியா் மோகனா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அப்போது, பல ஆண்டுகளாக பணியாற்றிய தொழிலாளா்களை புறக்கணித்து புதிய தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.
சச்சிதானந்தம் எம்.பி. பேசுகையில், பணி நீக்கம் செய்யப்பட்ட 17 தொழிலாளா்களுக்கும் மீண்டும் பணி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தாா்.
இதையடுத்து, அங்கு வந்த தலைமை மருத்துவ அதிகாரிகள், காவல் துறையினா் எம்.பி. சச்சிதானந்தத்திடம் போராட்டத்தை கைவிடுமாறு பேசுவாா்த்தையில் ஈடுபட்டனா். இரவு வரை போராட்டம் நீடித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





